சிபி ராதாகிருஷ்ணன் பதிவு
rajaji birthday modi tweet சுதந்திர போராட்ட வீரரும் சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான ராஜாஜியின் பிறந்த நாள் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இதற்கு குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள பதிவில், சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் தொலைநோக்கு பார்வையாளரான ராஜாஜியின் பிறந்த நாளில் மரியாதை செலுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பொது வாழ்க்கையை தனது தெளிவான சிந்தனையாலும், அசைக்க முடியாத அர்ப்பணிப்பாலும் வடிவமைத்த ஞானம் கொண்ட அரசியல்வாதி ராஜாஜி என புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், நேர்மை, அறிவு மற்றும் தேச சேவைக்காக பாடுபடுபவர்களுக்கு அவரது வாழ்க்கையும் மரபும் ஒரு வழிகாட்டும் ஒளியாகத் தொடர்கின்றன என சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி எக்ஸ் பதிவு
இதைப்போல், பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சுதந்திரப் போராட்ட வீரர், சிந்தனையாளர், அறிவு ஜீவி, அரசியல்வாதியுமான ராஜாஜியின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். மதிப்பை உருவாக்குவதிலும், மனித கண்ணியத்தை நிலைநிறுத்திய ராஜாஜியின் பங்களிப்பை நாடு நினைவுகூர்கிறது என தெரிவித்துள்ளார். மேலும், ராஜாஜியின் ஆவணக் காப்பகங்களில் உள்ள சில சுவாரஸ்யமான விஷயங்களை பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.
அண்ணாமலை எக்ஸ் பதிவு
இதைப்போல், தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சுதந்திரப் போராட்ட வீரரும், உப்பு சத்தியாகிரக போராட்டத்தை தமிழகத்தில் முன்னின்று நடத்தியவரும், தலைசிறந்த வழக்கறிஞராகவும், எழுத்தாளராகவும் விளங்கிய பாரத ரத்னா, சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் பிறந்த தினம் இன்று என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இந்தியாவின் முதல் தலைமை ஆளுநராகவும், சென்னை மாகாணத்தின் முதல்வர், சென்னை மாநில முதலமைச்சர், மேற்கு வங்க ஆளுநர், மத்திய உள்துறை அமைச்சர் போன்ற பல்வேறு பதவிகளில் திறம்பட பணியாற்றியவர். உலக அமைதியையும் சமாதானத்தையும் வலியுறுத்தியவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தீண்டாமை ஒழிப்பு, மது ஒழிப்பு, ஆலய நுழைவுப் போராட்டம் என, சுயநலமின்றி, தமது இறுதிக் காலம் வரை சமூகத்திற்காகவும், மக்களுக்காகவும் உழைத்த அமரர் ராஜாஜி அவர்கள் புகழைப் போற்றி வணங்குகிறோம் என்று அவரது புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.