
PM Modi Visit Trinidad and Tobago : அரசுமுறைப்பயணமாக கரீபியின் தீவு நாடானா ட்ரினிடாட் மற்றும் டொபாகோ சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டு பிரதமர் மற்றும் ஜனாதிபதி இருவரும் இந்திய வம்சாவழியினர் என்பதை தனது உரையில் மோடி குறிப்பிட்டு பேசினார். இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது :
கரீபியன் தீவு(Caribbean islands) நாடான ட்ரினிடாட் மற்றும் டொபாகோவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி(Narendra Modi) சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் அந்நாட்டுப் பிரதமர் கமலா பிரிசத் பிஸ்சர் மற்றும் ஜனாதிபதி கிறிஸ்டைன் கார்லா கங்காலு ஆகியோரை சந்தித்தார். இருவரும் இந்திய வம்சாவழியினர் என்பதும் அதிலும் ஜனாதிபதி கிறிஸ்டைன் கங்காலு பூர்விகம் தமிழகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ட்ரினிடாட் டொபாகோ(Trinidad and Tobago) நாட்டின் மிக உயரிய தேசிய விருதான 'தி ஆர்டர் ஆப் தி ரிபப்ளிக் ஆப் ட்ரினிடாட் அண்ட் டொபாகோ' விருதைப் பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி , அந்நாட்டின் நாடாளுமன்ற அவையில் உரையாற்றினார். அப்போது, அவர் ஜனாதிபதி கங்காலுவின் மூதாதையர்கள் திருவள்ளுவர் பிறந்த பூமியான தமிழ்நாட்டைச் சார்ந்தோர் என்று குறிப்பிட்டார்.
மேலும், ஒரு நாட்டிற்குத் தேவையான ஆறு முக்கியமான விஷயங்களை, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் எழுதியுள்ளார் என்று திருக்குறளை(Thirukkural) மேற்கோள் காட்டினார் பிரதமர்.
படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு" எனும் திருக்குறளைக் குறிப்பிட்டு, வீரமிக்க படை, நாட்டுப்பற்று மிக்க மக்கள், குறையாத செல்வம், நாட்டின் நலம் அறிந்து செயல்படும் அமைச்சர், அழிக்கமுடியாத இராணுவம், மேலும் துன்பத்தில் உதவும் அண்டை நாட்டு நட்பு ஆகிய 6 முக்கியக் கூறுகளை வலிமையான நாடுகள் தங்களிடம் வைத்திருக்க வேண்டும் என்றும் திருவள்ளுவர்(Thirukkural) கூறியது போல ட்ரினிடாட் மற்றும் டொபாகோ எந்தவொரு ஆபத்திலும் உதவும் நட்பு நாடு என்றும் குறிப்பிட்டார்.
இவ்வாறு, திருக்குறளின் பெருமையை அந்நிய மண்ணில் மிகச்சிறப்பாக எடுத்துரைத்து, தமிழின் பெருமையையும் தமிழர்களின் சிறப்பையும் நிலைநாட்டியுள்ளார் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி. இவ்வாறு அந்தப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.