

இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி , தற்போது தனது பொது நிகழ்ச்சிகளில் வழங்கும் உரைகளை தயார் செய்ய ChatGPT எனும் செயற்கை நுண்ணறிவு கருவியை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
மணிகண்ட்ரோல் இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டியில், முன்பு ஒரு உரையை தயார் செய்ய எனக்கு 25 முதல் 30 மணி நேரம் பிடித்தது. தலைப்பும், துணைத்தலைப்பும், இரண்டுக்கும் தொடர்பும், ஒரு வலிமையான செய்தியுடன் முடிவடையும் வகையிலும் எழுத வேண்டியிருந்தது.
ஆனால் இப்போது, AI கருவியை பயன்படுத்தி 5 மணி நேரத்தில் அந்த உரையை மேம்படுத்த முடிகிறது என்று தெரிவித்துள்ளார். மேலும், ChatGPT கருவியைப் பயன்படுத்துவதன் மூலம், தனது எழுத்துத் திறன் 5 மடங்கு அதிகரித்தது எனக் கூறிய அவர், இக்கருவி உற்பத்தித்திறனை அதிகரிக்க உதவியுள்ளது என்றார்.
ஏஐ தொழில்நுட்பம், வேலை வாய்ப்புகளைப் பறிக்கும் கருவி அல்ல; மனிதத் திறனுக்கான ஒரு கூடுதல் கருவி என்ற அடிப்படையில் அதைப் பார்க்க வேண்டும் என கூறிய நாராயணமூர்த்தி, நல்ல அவுட்புட் கிடைக்க, சரியான கேள்வி கேட்க தெரிந்திருக்க வேண்டும். அதுதான் என் மகன் எனக்குச் சொன்னார். இது ப்ரோகிராமர்களையும், அனலிஸ்ட்களையும் மிகச் சிக்கலான கேள்விகளை வரையறுக்கக்கூடிய நிபுணர்களாக மாற்றும் என்றார்.
1970களில் கணினிகள் வந்தபோது மனிதர்களின் வேலைகளை பறிக்கும் எனக் கூறி தொழிற்சங்கங்கள் அதனை எதிர்த்தன. ஆனால் நாளடைவில் கணினிகள் உற்பத்தித்திறனை பெரிதும் அதிகரித்தன, இன்று ஏஐ- யும் அதேபோல பயனளிக்கக்கூடியதாக இருக்கலாம் என தான் நம்புவதாக தெரிவித்தார்.