

நவம்பர் 26-ம் தேதி வெளியான தனது கட்டுரையில் பிரதமர் மோடி, மகளிருக்கு உரிய அரசியல் பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்கான முயற்சியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான மசோதா நிறைவேறாமல் போனதற்கு எதிர்க்கட்சிகளே காரணம் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கான வழிவகைகளை உள்ளடக்கிய அரசியலமைப்பு திருத்த மசோதா, கடந்த ஏப்ரல் 17-ம் தேதி மக்களவையில் போதிய ஆதரவு கிடைக்காததால் தோல்வியடைந்தது.
இந்த மசோதாவுக்கு அரசியலமைப்பு திருத்தத்திற்கு தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இதற்கிடையே, 2023-ம் ஆண்டிலேயே நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் 'நாரி சக்தி வந்தன் அதினியம்' சட்டம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால், அதன் நடைமுறை அமலாக்கம் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை நடவடிக்கைகளுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.
இந்த நடைமுறையை விரைவுபடுத்துவதற்கான 2026 திருத்த மசோதாதான் ஏப்ரலில் தோல்வியடைந்தது
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும் என்பதே 33 சதவீத இடஒதுக்கீட்டின் முக்கிய நோக்கமாகும்.
இதற்காக அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தியுள்ளார்.
மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது
=====================