நாடு முழுவதும் 233 கோடிக்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகள் : 'ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை' திட்டத்தின் பிரம்மாண்ட சாதனை!

ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் கீழ் இதுவரை 233 கோடி பரிவர்த்தனைகள் மூலம் 614 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
One Nation One Ration Card Scheme Achievements 2026 PIB Report
One Nation One Ration Card Scheme Achievements 2026 PIB Reportsource: PIB in Tamil Nadu,x.com
2 min read

One Nation One Ration Card Scheme Achievements 2026 PIB Report

பொது விநியோகத் துறையில் புரட்சி செய்த திட்டம்

மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறையால் 2019-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட 'ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை' (One Nation One Ration Card - ONORC) திட்டம், பொது விநியோக நடைமுறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள சீர்திருத்த நடவடிக்கையாகும்.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகள் புதிய குடும்ப அட்டை பெறாமலேயே நாட்டின் எந்தப் பகுதியிலும் உள்ள நியாயவிலைக் கடைகளில் தங்களுக்குரிய உணவு தானியங்களைப் பெற இத்திட்டம் வழிவகை செய்கிறது.

குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் இடம்பெயரும் குடும்பங்களின் உணவுப் பாதுகாப்பையும் இது உறுதி செய்துள்ளது.

233 கோடி பரிவர்த்தனைகள் மற்றும் 36 மாநிலங்களில் முழு அமல்

பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்திட்டத்தின் முக்கிய சாதனைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் விரிவாக்கம்

நாட்டில் உள்ள 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் இத்திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டப் பயனாளிகள் 100 சதவீதம் இத்திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

உணவு தானிய விநியோகம்

இத்திட்டத்தின் கீழ் மாதந்தோறும் சுமார் 3.27 கோடி பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 233 கோடிக்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகள் பதிவாகி, 614 லட்சம் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான உணவு தானியங்கள் விநியோகிக்கப்பட்டு உள்ளன.

100% டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் ஆதார் இணைப்பு புள்ளிவிவரம்

2026 அக்டோபர் நிலவரப்படி, பொது விநியோக முறையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப நடவடிக்கைகள்.

100% டிஜிட்டல் பதிவு

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் சுமார் 78.65 கோடி பயனாளிகளின் விவரங்கள் 100 சதவீதம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு உள்ளன.

ஆதார் மற்றும் இ-கேஒய்சி (e-KYC)

மத்தியத் தொகுப்பில் உள்ள 20.51 கோடி குடும்ப அட்டைகளில் 98.8 சதவீதம் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 76.97 கோடி பயனாளிகளின் ஆதார் விவரங்கள் இணைக்கப்பட்டுள்ளதுடன், 2026 செப்டம்பர் 30 வரை 71.52 கோடி பயனாளிகளிடம் மின்னணு வாடிக்கையாளர் சரிபார்ப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன.

மின்னணு விற்பனை கருவிகள்

நாடு முழுவதும் உள்ள 5.51 லட்சம் நியாயவிலைக் கடைகளில் 99.8 சதவீதக் கடைகளில் மின்னணு விற்பனை கருவிகள் (e-PoS) செயல்பாட்டில் உள்ளன.

போலிப் பதிவுகள் நீக்கம் மற்றும் 'சார்த்தக்' திட்டம்

விவரங்கள் சரிபார்ப்பின் மூலம் முதற்கட்டத்தில் 2.58 கோடி போலிப் பதிவுகளும், அடுத்த கட்டத்தில் 68 லட்சம் போலிப் பதிவுகளும் நீக்கப்பட்டு உண்மையான பயனாளிகளுக்கு உணவு தானியங்கள் சென்றடைவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

'சார்த்தக்' (SARTHAK) முன்னெடுப்பு

2031 மார்ச் 31 வரை செயல்படுத்தப்படும் 'சார்த்தக்' பொது விநியோகத் திட்டத்தின் கீழ், கொள்முதல் முதல் விநியோகம் வரை தரவுக் கட்டமைப்பு மற்றும் வாகன கண்காணிப்பு அமைப்பு ஆகியவை 'நிர்மல்' மற்றும் 'சக்ஷம்' ஆகிய முன்னெடுப்புகள் மூலம் வலுப்படுத்தப்படுகின்றன.

13 மொழிகளில் 'மேரா ரேஷன்' செயலி

பயனாளிகள் தங்களுக்குரிய மாதாந்திர உணவு தானிய ஒதுக்கீடு, முந்தைய பரிவர்த்தனை விவரங்கள், ஆதார் இணைப்பு நிலை ஆகியவற்றை அறிந்து கொள்ளவும், அருகிலுள்ள நியாயவிலைக் கடைகளை ஜிபிஎஸ் மூலம் கண்டறியவும் 13 மொழிகளில் 'மேரா ரேஷன்' கைப்பேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தொழில்நுட்பச் சீர்திருத்தங்கள் மூலம் நாடு முழுவதும் உள்ள பயனாளிகள் தாங்கள் வசிக்கும், பணிபுரியும் இடங்களிலேயே உணவு தானியங்களைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது நாட்டின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துகிறது.

=================