

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட புளூபேர்ட்
PM Modi Praised ISRO Scientists for Bahubali Satellite Launch : ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில், இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து, இன்று டிசம்பர் 24ம் தேதி காலை, 8:54 மணிக்கு, எல்.வி.எம்., 3 ராக்கெட் வாயிலாக, 'புளூபேர்ட்' செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.
கிராமங்களுக்கு இணையதள சேவைகளை வழங்கவே விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது
அதனைத் தொடர்ந்து, தரையில் இருந்து புறப்பட்டு 15 நிமிஷம் 52 வது வினாடியில், 520 கி.மீ உயரத்தில், புவியின் தாழ் வட்ட சுற்றுப் பாதையில் செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்த 'புளூபேர்ட்' செயற்கைக்கோளை அமெரிக்காவை சேர்ந்த ஏ.எஸ்.டி., நிறுவனம், தகவல் தொடர்பு சேவைக்காக உருவாக்கி இருக்கிறது. இதன் எடை 6,500 கிலோ. இது, தொலைதுார கிராமங்களுக்கு, மொபைல் போன், அதிவேக இணையதள சேவைகளை வழங்க உதவும் முண்ணனியாக அமைந்துள்ளது.
விஞ்ஞானிகளை பாராட்டி பதிவிட்ட பிரதமர் நரேந்திர மோடி
இந்த நிலையில், புளூபேர்ட் வெற்றி கரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் விண்வெளித் துறையில் இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்று பதிவிட்டுள்ள அவர், இந்திய மண்ணிலிருந்து ஏவப்பட்டதிலேயே மிகவும் கனமான செயற்கைக்கோளான, அமெரிக்காவின் ப்ளூபேர்ட் பிளாக்-2 விண்கலத்தை அதன் திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்திய LVM3-M6 ஏவுதல், இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் ஒரு பெருமைமிக்க மைல்கல்லைக் குறிக்கிறது.
இந்தியா மேலும் உயர பறக்கிறது
இது இந்தியாவின் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் ஏவுதல் திறனை வலுப்படுத்துகிறது மற்றும் உலகளாவிய ராக்கெட் ஏவுதல் சந்தையில் நமது வளர்ந்து வரும் பங்கை உறுதிப்படுத்துகிறது என்றும் இது தற்சார்பு இந்தியாவை நோக்கிய நமது முயற்சிகளையும் பிரதிபலிக்கிறது.
இதற்காக கடினமாக உழைத்த விண்வெளி விஞ்ஞானிகளுக்கும் பொறியாளர்களுக்கும் வாழ்த்துகள்.விண்வெளி உலகில் இந்தியா தொடர்ந்து மேலும் உயரப் பறக்கிறது என்று பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.