வெளிநாட்டு சக்திகள் விவகாரம் மோடிக்கு நேரடி விவாத சவால் விடுத்த ராகுல் காந்தி..!

வெளிநாட்டு சக்திகள் குறித்து பிரதமர் மோடி முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த ராகுல் காந்தி; எந்த இடத்திலும் நேரடி விவாதத்திற்குத் தயார் என அறிவிப்பு ...
Political Showdown: Rahul Gandhi Demands Open Debate with PM Modi
Political Showdown: Rahul Gandhi Demands Open Debate with PM ModiGoogle
1 min read

நேரடி விவாத சவால் விடுத்த ராகுல் காந்தி :

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இடையே வெளிநாட்டு சக்திகள் தொடர்பான கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் குழப்பத்தை ஏற்படுத்த சில சக்திகள் வெளிநாட்டு ஆதரவுடன் செயல்படுவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியிருந்த நிலையில், அதற்குப் பதிலளித்த ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கே வெளிநாட்டு ஆதரவு இருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் நேரடி விவாதம் நடத்தத் தயார் என்றும் சவால் விடுத்துள்ளார்.

வெளிநாட்டு சக்திகள் குறித்து பேசிய பிரதமர் மோடி :

கடந்த அக்டோபர் 31-ம் தேதி குஜராத்தின் ஏக்தா நகரில் நடைபெற்ற சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், நாட்டில் சில சக்திகள் பொய்களையும் வதந்திகளையும் பரப்பி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்வதாகக் குற்றம்சாட்டினார்.

மேலும், வெளிநாடுகளில் யாரை யார் ரகசியமாகச் சந்திக்கிறார்கள், இந்தியாவுக்கு எதிரான சக்திகள் யாருக்கு ஆதரவளிக்கின்றன, யார் இந்தியாவின் எதிரிகளின் மொழியில் பேசுகிறார்கள் என்பதை மக்கள் அடையாளம் காண வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மோடிக்கு எதிராக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டு :

பிரதமர் மோடியின் இந்த கருத்துகளுக்குப் பதிலளித்து நவம்பர் 2-ம் தேதி ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

அதில், பிரதமர் மோடி வெளிநாட்டு உதவியால்தான் பிரதமரானார் என்றும், தொடர்ந்து அந்தப் பதவியில் நீடிப்பதற்கும் வெளிநாட்டு ஆதரவு இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும், இந்தியாவின் நிதி அமைப்பு வெளிநாட்டினரின் கட்டுப்பாட்டிலும் ஆதரவிலும் இருப்பதாகவும், வெளிநாட்டு சமூக வலைதளங்கள் பிரதமர் மோடிக்கு ஆதரவளிப்பதாகவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டார்.

எந்த இடத்திலும் விவாதிக்கத் தயார் ராகுல் சவால் :

தனது பதிவில் பிரதமர் மோடிக்கு நேரடியாகச் சவால் விடுத்த ராகுல் காந்தி, இந்த விவகாரம் குறித்து எந்த மேடையிலும், எந்த நேரத்திலும் நேரடி விவாதம் நடத்தத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

மேலும், தன்னிடம் உள்ள தகவல்கள் குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தயங்குவதாகவும் அவர் விமர்சித்தார்.

இதனால், இரு தலைவர்களுக்கும் இடையிலான அரசியல் கருத்து மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது.

பாஜக தரப்பிலிருந்து வந்த எதிர்வினைகள் :

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு பாஜக தலைவர்கள் எதிர்வினை தெரிவித்து வருகின்றனர்.

சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய், ராகுல் காந்தியின் கருத்துகள் ஆதாரமற்றவை என்றும், எதிர்க்கட்சிகளிடம் மக்களிடம் பேசுவதற்கு வேறு பிரச்சினைகள் இல்லாததால் இதுபோன்ற கருத்துகளை முன்வைப்பதாகவும் விமர்சித்தார்.

=======================