

பிரதமர் மோடி எக்ஸ் பதிவு
modi tweet கேரளர் மாநிலம் திருவனந்தபுரத்திற்கு வருகை தந்து 3 அம்ரித் பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்து பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள மதுராந்தகத்திற்கு வருகை தரும் பாரத பிரதமர் மோடி,தேசிய ஜனநாயக கூட்டணி பேரணியில் கலந்து கொள்வதற்கு வருவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தமிழில் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது. மதுராந்தகத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் பேரணியில் நான் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் கலந்து கொள்ள இருக்கிறேன் என்று தெரிவித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு
மேலும், ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது எனவும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் சாதனையும் பிராந்திய பெருவிருப்பங்கள் மீதான அதன் அர்ப்பணிப்பும் மாநில மக்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.
இன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட தேஜகூட்டணி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் என பலரும் பங்கேற்கவுள்ளனர்.
ஸ்டாலின் எக்ஸ் பதிவு
பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் உள்ள மதுராந்தகம் வருகையை தொடர்ந்து,வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவினை மேற்கோள்காட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தமிழ்ப்பாசத்தில் தமிழர்களை மிஞ்சியதாய்க் காட்டிக்கொள்ளும் உங்கள் அரசிடம் இருந்து தமிழுக்குரிய நிதி ஒதுக்கீடு எப்போது வரும் என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், இயற்கைப் பேரிடர்களுக்காக நாங்கள் கேட்ட நிவாரணத் தொகை எப்போதுதான் வரும் என்றும் ஓசூர் விமான நிலையம், கோவை & மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு எப்போது ஒப்புதல் வரும் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இவரின் இந்த பதிவிற்கு பலரும் தங்களது விமர்சன கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.