

QS உலகப் பல்கலைக்கழக தரவரிசை 2026-ல் இந்தியா வரலாற்றிலேயே சிறந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. QS நிறுவனத்தால் வெளியிடப்பட்ட தரவரிசையில், இந்தியாவின் 54 உயர்கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன.
2014-ஆம் ஆண்டில் வெறும் 11 நிறுவனங்களே இந்த பட்டியலில் இடம்பெற்றிருந்த நிலையில், இம்முறை 390 சதவிகித வளர்ச்சியுடன் 54 உயர்கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த வளர்ச்சி குறித்து பிரதமர் நரேந்திர மோடி அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: QS தரவரிசை 2026, இந்திய கல்வி துறைக்கு மகிழ்ச்சியான செய்தி. இளைஞர்களுக்கான ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை வளர்க்க அரசு உறுதியாக செயல்படுகிறது என்பதை உணர்த்துவதாக தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்த முன்னேற்றத்தை பாராட்டியுள்ளார். 2014-இல் 11 பல்கலைக்கழகங்கள் மட்டுமே இருந்த நிலையில், இப்போது 54 உயர்கல்வி நிறுவனங்கள் QS பட்டியலில் இடம்பிடித்துள்ளன. இது பிரதமர் மோடி தலைமையிலான கல்வி மாற்றங்களின் விளைவாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் உயர்ந்த தரவரிசை பெற்ற கல்வி நிறுவனம் ஐஐடி டெல்லி, 123வது இடத்தில் உள்ளது. ஐஐடி பம்பாய் – 129வது இடத்தில் உள்ளது. ஐஐடி சென்னை 180வது இடத்தில் இடம்பெற்று, முதல்முறையாக உலகத் தரவரிசையில் டாப் 200-க்குள் நுழைந்துள்ளது.
இந்த தரவரிசையின்படி இந்தியா உலகளவில் அமெரிக்கா, இங்கிலாந்து, மற்றும் சீனாவை அடுத்து நான்காவது இடத்தில் உள்ளது.