

Rahul Gandhi Direct Debate Challenge PM Modi
பிரதமர் மோடி குறித்து ராகுல்
பிரதமர் மோடி தன்னுடன் நேரடி அரசியல் விவாதத்திற்கு வந்தால் அவரது அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, தொடர்ந்து நேரடி பொது விவாதத்திற்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்து வருகிறார்.
Ask Me கலந்துரையாடலில் ராகுல்
இந்நிலையில் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், Ask Me எனும் என்னுடன் கலந்துரையாடுங்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.
இந்த கலந்துரையாடலில், நாடாளுமன்றத்திலேயே விவாதம் நடத்தல் என பாஜக கூறி வரும் நிலையில், ஏன் தொடர்ந்து பொது விவாதத்திற்கு வலியுறுத்துகிறீர்கள்? என அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு ராகுல் காந்தி பதிலளித்தார்.
பேசுவதற்கு மறுக்கப்படும் அனுமதி?
அவர் கூறுகையில், மக்களவையில் எனது மேசையில் உள்ள மைக்ரோ போனை அணைத்து விடுகிறார்கள். அங்கு எனக்கு பேசுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்றார்.
உரைகள் கொண்ட விவாதம் எப்போதும் தேவையில்லை.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், சீன விவகாரம், வாக்கு திருட்டு, வேளாண் சட்டங்கள், எப்ஸ்டீன் விவகாரம் மற்றும் ஜெனரல் நரவானேவின் புத்தகம் என எதைப்பற்றியும் என்னைப் பேசுவதற்கு மக்களவையில் அனுமதிப்பதில்லை என்றார்.
மேலும், நான் one to one debate அதாவது நேருக்கு நேரான விவாதத்தை மட்டுமே விரும்புகிறேன். எனக்கு உரைகள் கொண்ட விவாதம் எப்போதும் தேவையில்லை.
அந்தவகையில் நீண்ட உரைகளுக்குப் பதிலாக இருவரும் ஒருவரை ஒருவர் நேரடியாக குற்றம் சாட்டிக்கொள்ளும் வகையிலான விவாதத்தையே விரும்புகிறேன்.
ஒரு பக்கம் நானும் ஒரு பக்கம் மோடியும்
நேரடி விவாதத்தில் ஒரே மேசையில் ஒரு பக்கம் நானும் ஒரு பக்கம் மோடியும் இருந்து விவாதிக்கத் தயார். ஆனால் அதே சமயம் மோடி என்மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கட்டும், அதேபோல் நானும் அவர்மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறேன்.
இந்த விவாதத்திற்கு நடுவராக ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் நியமிக்கப்பட்டாலும் சரி, அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி நியமிக்கப்பட்டாலும் சரி எனக்கு ஆட்சேபணை இல்லை என்றார்.
பிரதமர் மோடி பதவியில் இருக்க மாட்டார்
எனினும், இந்த நேரடி விவாதத்திற்குப் பிறகு பிரதமர் பதவியில் பிரதமர் மோடி இருக்க மாட்டார் என்றார்.
அதுமட்டுமின்றி தனது மற்றுமொரு சமூக வலைதளப் பக்கமான எக்ஸ் வலை தளப் பக்கத்தில், வீடியோ ஒன்றையும் ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், நான் மீண்டும் சொல்லிக்கொள்கிறேன். பிரதமர் மோடி என்னுடன் நேரடி விவாதத்திற்கு வந்தால் அவரது அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடும் என்பது அவருக்கும் நன்றாகத் தெரியும், எனக்கும் தெரியும் என்று பேசியுள்ளார்.
உண்மையில் யார் தேச துரோகி?
மேலும், என்னை தேச விரோதி என்று பிரதமர் மோடி தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் உணமையில் யார் தேச விரோதி? யாரை யார் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்கள்? என்று நான் இந்த நாட்டிற்கு வெளிப்படுத்துவேன்.
அவருக்கும் இந்த உண்மை தெரியும். அதனால் தான் அவர் இப்போது என்னைப் பற்றி அவதூறு சொல்வதில்லை. நேரடி விவாதத்திற்கு வருவதற்கு பயப்படுகிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
டெலிபிராம்ப்டர் தேவைப்பட்டால் கூட....
தொடர்ந்து பேசிய அவர், உங்கள் ஆதரவு ஊடகங்களின் தீபாவளி நிகழ்வில் கூடவா தங்களுக்கு டெலிபிராம்ப்டர் தேவைப்படுகிறது என கேள்வி எழுப்பிய அவர், பரவாயில்லை, என்னுடன் விவாதத்திற்கு வரும்போது தேவைப்பட்டால் டெலிபிரம்ப்டரையும் கொண்டுவாருங்கள்.
வேண்டுமென்றால் நடுவரைக்கூட அழைத்து வாருங்கள். யார் உண்மையான தேச துரோகி என்பதை தெரிந்துகொள்ள இந்த நாடே ஆவலாக உள்ளது என்றும் ராகுல் காந்தி அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
=======