

அதிவேக விரைவு சாலை அமைத்தல் பணி
Bengaluru To Vijayawada National Highway : ஆந்திராவின் விஜயவாடா மற்றும் கர்நாடகாவின் பெங்களூரு இடையே, கடப்பா வழியாக அதிவேக விரைவு ஆறு வழி சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
'பாரத்மாலா பரியோஜனா' இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ், 'என்.எச்., 544 ஜி' என்ற பெயரில் செயல்படுத்தப் படுகிறது. மொத்தம் 624 கி.மீ., நீளமுள்ள இந்த நெடுஞ்சாலையில், ஆந்திராவில் எட்டு மாவட்டங்களும், கர்நாடகாவில் மூன்று மாவட்டங்களும் அமைந்துள்ளன.
கட்டுமான பணி
இதில், 19,320 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் இந்த நெடுஞ்சாலை, ஆந்திராவின் சத்ய சாய் மாவட்டத்தில் உள்ள கொடிகொண்டாவில் துவங்கி, பெங்களூரில் முடிவடையும். மண் நிரப்புதல், சாலை பணிகள், பாலங்கள் கட்டுதல், வடிகால் அமைப்புகள் உள்ளிட்டவை பல்வேறு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மொத்தம் 14 பிரிவுகளாக பணிகள் நடந்து வருகின்றன. இதில், ஆந்திராவின் கொடூர் - வானவோலு இடையிலான பணியை, ம.பி.,யை சேர்ந்த, 'திலிப் பில்ட்கான்' நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
அதேபோல் வானவோலு - ஓடுலுபல்லே இடையிலான பணிகளை, மஹாராஷ்டிராவை தலைமையிடமாக கொண்டு செயல்படும், 'ராஜ்பாத் இன்ப்ராகான்' நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
2 உலக சாதனை படைக்கும் முயற்சி
இந்த நிறுவனம், சத்ய சாய் மாவட்டத்தில், புட்டபர்த்தி அருகே 24 மணி நேரத்தில், 28.95 கி.மீ., நீளத்திற்கு சாலை அமைத்துள்ளது. இதற்காக, 10,675 மெட்ரிக் டன் 'பிட்மினஸ்' கான்கிரீட்டை தொடர்ச்சியாக ராஜ்பாத் நிறுவனம் பயன்படுத்தியுள்ளது.
ஒரே நாளில், தொடர்ச்சியாக பிட்மினஸ் கான்கிரீட்டை பயன்படுத்தி, 28.95 கி.மீ., சாலை அமைக்கப்பட்டதை அடுத்து, கின்னஸ் சாதனையை இந்த நிறுவனம் படைத்துள்ளது.
இதன் வாயிலாக, சாலை கட்டுமானப் பணியில், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் பணி, உலகளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.
வானவோலு - வான்கரகுண்டா - ஓடுலப்பள்ளி பிரிவில் 42.2 கி.மீ.,க்கு தொடர்ச்சியான இருவழி பிட்மினஸ் சாலையை அமைப்பதன் வாயிலாக, மேலும் இரண்டு கின்னஸ் உலக சாதனைகளை படைக்கும் முயற்சியில், இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
சந்திரபாபு நாயுடு பெருமிதம்
ஏற்கனவே இரண்டு முறை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ராஜ்பாத் நிறுவனம், வரும் 11ம் தேதி வரை இந்த வழித்தடத்தின் இரண்டு பிரிவுகளில் தொடர்ந்து பணியாற்ற உள்ளது.
இந்த சாதனையை தேசிய அளவில் பெருமைக்குரிய தருணம் என தெரிவித்துள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, 'இது, மத்திய அரசின் தொலைநோக்கு பார்வைக்கும், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியின் தலைமையில் மேற்கொள்ளப்படும் சாலை உட் கட்டமைப்பு பணிகளுக்கு கிடைத்த பெருமை' என, தெரிவித்துள்ளார்.
வரும் 12ம் தேதி புட்டபர்த்தியில் நடக்கும் பிரமாண்ட நிகழ்ச்சியில், ராஜ்பாத் நிறுவனத்துக்கு கின்னஸ் சாதனைக்கான சான்றிதழை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வழங்கவுள்ளார்.
'பிட்மினஸ்' சாலை சிறப்பம்சம்
'பிட்மின்' என்பது கச்சா எண்ணெயில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஒரு பிசுபிசுப்பான பொருள். இது சரளைக் கற்களை ஒன்றாக பிணைக்க பயன்படுகிறது.
இந்த வகையான சாலையில், அடித்தளம், பிணைப்பு அடுக்கு, மேற்பரப்பு அடுக்கு என பல அடுக்குகள் கொண்டிருக்கும். மேலும், தண்ணீர் புகாத தன்மையை கொண்டிருக்கும்.
'பிட்மினஸ்' சாலைகள் மென்மையான மற்றும் வசதியான பயண அனுபவத்தை வழங்குகிறது. குறைந்த இரைச்சலை ஏற்படுத்தும்
இந்த சாலையில், ஆரம்ப கட்டுமான செலவும் மிகவும் குறைவு. நெகிழ்வுத்தன்மை, செலவு- திறன் மற்றும் விரைவான கட்டுமானத்திற்கு பிட்மினஸ் சாலைகள் பிரபலமாக உள்ளன. ஆனால், அவற்றின் நீண்ட ஆயுளுக்கு தொடர் பராமரிப்பு அவசியம் என்பது குறிப்பிட்டத்தக்கது.