
Ravi Shankar Prasad on Bihar SIR : பீகாரில் தேர்தல் ஆணையம்(EC) நடத்தி வரும் சிறப்பு வாக்காளர் திருத்த (Special Intensive Revision - SIR) நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில் டெல்லியில் பாரதிய ஜனதா கட்சி எம்பி ரவி சங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியதாவது :
இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, இந்திய குடிமக்களுக்கு மட்டுமே வாக்குரிமை உள்ளது. இதை ஆய்வு செய்வதில் எதிர்க்கட்சிகளுக்கு ஏன் பிரச்சினை? தங்கள் தொகுதியில் வழக்கமாக வசிப்பவர்களுக்கு மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும். ஒருவர் வசிப்பவர் என்பதை உறுதி செய்வதில் என்ன பிரச்சினை?
வங்கதேசத்தவர்கள் மற்றும் ஊடுருவியவர்கள் பெயரில் அரசியல் செய்யும் தலைவர்கள் இப்போது பதற்றத்தில் உள்ளனர். அராரியா, பூர்ணியா, மற்றும் கிஷன்கஞ்ச் ஆகிய பகுதிகளில் மக்கள் தொகையை விட 125 சதவீதம் அதிகமாக ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையம், பெரும்பாலானவர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள் என்று கூறியுள்ளது. இந்தியா ஒரு ‘தர்மசாலை’ அல்ல... வங்கதேசத்தவர்கள் மற்றும் ஊடுருவியவர்கள் பெயரில் அரசியல் செய்யும் தலைவர்கள் இப்போது பயப்படுகின்றனர்.
இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
முன்னதாக, காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி வத்ரா, பீகாரில் தேர்தல் ஆணையம் நடத்தி வரும் வாக்காளர் பட்டியல் திருத்தம்(Bihar Voter List Revision) குறித்து கடும் எதிர்ப்பை வெளியிட்டார். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இந்த நடவடிக்கை “ஜனநாயகத்தை கொலை செய்வதாக” உள்ளது என்று அவர் குற்றம்சாட்டினார்.
இந்தியா கூட்டணி மற்றும் அதன் தலைவர்கள், தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கைக்கு எதிராக பாராளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். மக்களின் வாக்குரிமை பறிக்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பல காங்கிரஸ் எம்பிக்கள், பீகாரில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விவாதிக்க, பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒத்திவைப்பு மசோதா அறிவிப்புகளை முன்மொழிந்தனர். காங்கிரஸ் எம்பிக்கள் கவுரவ் கோகோய், எஸ். ஜோதிமணி, ரஞ்சித் ரஞ்சன், மற்றும் நீரஜ் தங்கி ஆகியோர் இந்த பிரச்சினையை விவாதிக்க ஒத்திவைப்பு மசோதா அறிவிப்பை முன்மொழிந்தனர். இருப்பினும், எதிர்க்கட்சிகளின் முழக்கங்களுக்கு மத்தியில் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன