

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், மத்திய அரசு அனைத்து கட்சி எம்.பி.க்கள் அடங்கிய 7 குழுக்களை பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வைத்தது. காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் ஒரு குழுவுக்கு தலைமை தாங்கினார். இந்த பயணம் குறித்து, நாளிதழில் ஒன்றில் கட்டுரை எழுதினார் தரூர். அதில் , பிரதமர் மோடியின் ஆற்றல், சுறுசுறுப்பு ஆகியவை சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு முக்கிய சொத்தாக இருந்தன என குறிப்பிட்டிருந்தார். இந்த கட்டுரை பிரதமர் அலுவலக எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டது.
சசிதரூரின் இந்த கருத்து காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும் அவர் பாஜகவில் சேரப்போகிறார் என்றும் பேசப்பட்டது. ஆனால் , பிரதமரை பாராட்டியது பாஜகவில் சேர்வதற்கான அறிகுறி அல்ல என்றும் தேசிய ஒற்றுமை மற்றும் இந்தியாவுக்கு ஆதரவாக நிற்பதன் பிரதிபலிப்பு என்றும் சசி தரூர் விளக்கம் அளித்திருந்தார்.
இதனிடையே காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவசரநிலை பிரகடண நாளை முன்னிட்டு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, சசி தரூர் எழுதிய கட்டுரை பற்றிய கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், சசி தரூர் ஆங்கிலத்தில் புலமை பெற்றவர். என்னால் ஆங்கிலம் சரியாக படிக்க இயலாது. அவருடைய மொழி மிகச் சிறப்பு. அதனால்தான் அவரை காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராக நியமித்தோம் என்றார். மேலும்
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்ட ராணுவத்துக்கு ஆதரவு அளித்தோம். நாடுதான் முதல், கட்சி பின்னர்தான் என நாங்கள் சொல்கிறோம். ஆனால், சிலர் மோடிதான் முதல், நாடு என்பது பிறகுதான் என கருதுகின்றனர். என்ன செய்ய முடியும் என்று கார்கே கூறினார்.
சசி தரூரை மறைமுகமாக சாடும் வகையில் கார்கே பேசியிருந்த நிலையில், சசி தரூர் தனது எக்ஸ் தளத்தில் ஒரு பறவையின் படத்தை வெளியிட்டுள்ளார். அதில், பறப்பதற்கு யாரிடமும் அனுமதி கேட்காதீர்கள். சிறகுகள் உங்களுடையது, ஆகாயம் யாருக்கும் சொந்தம் இல்லை" என பதிவிட்டுள்ளார். இது கார்கேவுக்கு சொன்ன பதிலாக பார்க்கப்படுகிறது.