

உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் தற்கொலைகளைத் தடுப்பது, அவர்களின் மனநலம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி எஸ். ரவீந்திர பட் தலைமையில் தேசிய பணிக்குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு நாடு முழுவதும் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் மனநிலை, கல்விச்சூழல் மற்றும் அவர்களுக்கு கிடைக்கும் ஆதரவு குறித்து ஆய்வு மேற்கொண்டது.
ஆய்வின் முதல் கட்ட அறிக்கையில், உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களில் சுமார் 15 சதவீதம் பேர் கடந்த 6 மாதங்களில் கடுமையான மன உளைச்சலை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், ஆய்வில் பங்கேற்ற மாணவர்களில் 9 சதவீதம் பேர் தங்களுக்கு தற்கொலை எண்ணங்கள் வந்ததாக தெரிவித்துள்ளனர்.
மாணவர்களின் மனநிலையை பாதிக்கும் மற்றொரு முக்கிய அம்சமாக, கல்வி வளாகத்தில் தங்களை தனிமைப்படுத்தப்பட்டவர்களாக உணர்வதும் தெரியவந்துள்ளது.
ஆய்வில் பங்கேற்றவர்களில் 34 சதவீதம் பேர், தாங்கள் வளாகத்தில் ஒரு அன்னியரைப் போல உணர்வதாக தெரிவித்துள்ளனர்.
சாதி அடிப்படையிலான அவமதிப்புகள் மற்றும் பாகுபாடுகள் உள்ளிட்ட அனுபவங்களும் மாணவர்களின் மனநலப் பிரச்சினைகளுடன் தொடர்புடையதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, கல்வி நிறுவனங்களில் நிலவும் பாகுபாடு மற்றும் சமூக அழுத்தங்கள் சில மாணவர்களின் மனநிலையை தீவிரமாக பாதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி நிறுவனங்கள் தங்களின் கடுமையான பிரச்னைகளை நியாயமான முறையில் கையாளும் என 56 சதவீத மாணவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில், 32 சதவீத மாணவர்கள் தங்கள் கல்வி நிறுவனங்களில் ஆலோசனை சேவைகள் வழங்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வில் 2.43 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
அவர்களில் சுமார் 67 சதவீதம் பேர் தலித், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் மனநலப் பிரச்சினைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, தேவையான ஆலோசனை மற்றும் ஆதரவு சேவைகளை வழங்க வேண்டிய அவசியத்தை இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.
கல்வி அழுத்தம் மட்டுமின்றி, தனிமை உணர்வு, பாகுபாடு மற்றும் வளாகச் சூழல் போன்ற காரணிகளும் மாணவர்களின் நல்வாழ்வில் கவனம் பெற வேண்டியவை என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
======================