
ஆக்சியம்-4 திட்டத்திற்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ள முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்ற விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, தன்னுடன் பாசிப்பயறு மற்றும் வெந்தய விதைகளையும் கொண்டு சென்றுள்ளார்.
ஆக்சியம்-4 திட்டத்திற்கான விண்கலமானது, வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்து விட்டதாகவும் சுபான்ஷு சுக்லா மற்றும் பிற விண்வெளி வீரர்கள் பாசிப்பயறு மற்றும் வெந்தய விதைகளை கொண்டு சென்றதற்கான நோக்கத்தையும் தார்வாட் விவசாய பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் பி.எல்.பாட்டீல் தெரிவித்துள்ளார்.
சுபான்ஷு சுக்லா கொண்டு சென்றுள்ள பாசிப்பயறு மற்றும் வெந்தய விதைகள் முதலில் விண்வெளியில் விதைக்கப்ட்டு இரண்டு நாட்களுக்கு தண்ணீர் ஊற்றப்படும்.இரண்டு மூன்று நாட்களில் முளைவிட்ட பயிர்களை விண்வெளி வீரர்கள் குளிர்பதன பிரிவில் வைத்து கண்காணிப்பர். அதன் பின்னர் அவர்கள் பூமிக்கு திரும்பும் போது அந்த முளைவிட்ட பயிர்கள் பத்திரமாக பூமிக்கு கொண்டுவரப்பட்டு தார்வாட் பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று தெரிகிறது.
தார்வாட் பல்கலைக் கழகத்தில் இந்த பயிர்களின் வளர்ச்சி,சத்துகள்,தரம் முதலானவை ஆய்வு செய்யப்படும். இதன் மூலம் அடுத்தமுறை விண்வெளி பயணம் மேற்கொள்வோருக்கு எந்த வகையில் இந்த பயிர்கள் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆய்வு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.