

zoho Sridhar Vembu Call to Indian IT Professionals US PERM Ban
அமெரிக்கா PERM திட்டத்தில் இந்திய ஐடி நிறுவனங்களுக்குத் தடை விதித்துள்ள நிலையில், அமெரிக்க வாழ் இந்தியர்கள் தாயகம் திரும்பி இந்தியாவைக் கட்டியெழுப்ப சோஹோ ஸ்ரீதர் வேம்பு அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்க அரசின் அதிரடி தடை உத்தரவு
அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் நிறுவனங்களின் ஆதரவுடன் நிரந்தரக் குடியுரிமையான 'கிரீன் கார்டு' பெறுவதற்கான மிக முக்கிய நடைமுறையாக 'நிரந்தரத் தொழிலாளர் சான்றிதழ் திட்டம்' (PERM - Permanent Labour Certification Programme) விளங்குகிறது.
இந்நிலையில், இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான டிசிஎஸ் , விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களை இந்த PERM திட்டத்தில் இருந்து அமெரிக்க அரசு திடீரென இடைநீக்கம் செய்துள்ளது.
இது குறித்துப் பேசிய அமெரிக்க தொழிலாளர் துறை அமைச்சர் கீத் சோண்டர்லிங் கூறியதாவது...
"டிசிஎஸ், விப்ரோ உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் புதிய நிரந்தரத் தொழிலாளர் சான்றிதழ் விண்ணப்பங்களை நாங்கள் இனி ஏற்க மாட்டோம். மேலும், ஏற்கனவே நிலுவையில் உள்ள விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீதர் வேம்புவின் எக்ஸ் தளப் பதிவு
அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கை குறித்து சோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தனது 'எக்ஸ்' வலைதளப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்கள் தாயகம் திரும்பி இந்தியாவின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஸ்ரீதர் வேம்பு தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது...
"அமெரிக்காவின் தொழில்நுட்ப வலிமைக்கு இந்தியர்கள் மிகப்பெரிய பங்களிப்பை செய்துள்ளனர். இருப்பினும், அமெரிக்காவின் கணிசமான மக்கள் இனி நம்மை விரும்பவில்லை என்பதே உண்மை.
அமெரிக்காவில் விசா மூலம் வசிப்பவர்கள், தங்களது கடின உழைப்பால் உருவாக்கிக்கொண்ட வாழ்க்கையை விட்டுவிட்டு வேறு இடத்துக்கு செல்ல வேண்டிய வேதனையான சூழலை தற்போது எதிர்கொள்கின்றனர். ஒரு துணிச்சலான புதிய எதிர்காலம் பிறப்பதற்கான வேதனையாக இதைக் கருதுவோம்.
இதுவே சரியான தருணம்
திரும்பி வாருங்கள், நாம் இந்தியாவைக் கட்டியெழுப்புவோம்! அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்கள் தாயகம் திரும்புவதற்கு இதுவே சரியான தருணம்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத் தாக்கம்
அமெரிக்க அரசின் இந்த கெடுபிடியான முடிவால், அங்குள்ள இந்திய ஐடி ஊழியர்களின் கிரீன் கார்டு கனவு கேள்விகுறியாகியுள்ள நிலையில், இந்தியத் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சியை நோக்கிய இந்த தாயகம் திரும்பும் அழைப்பு மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.
==============