

UIDAI Care Of Removal Reality Aadhaar Card Update
வதந்திகளும் பொதுமக்களின் அச்சமும்
சமீபநாட்களாக சமூக வலைத்தளங்களில் ஆதார் அட்டையில் 'Care of' பகுதி நீக்கப்பட்டு விட்டதாகவும், இனி தந்தை அல்லது கணவர் பெயர், காப்பாளரின் பெயர் இடம்பெறாது என்றும், பழைய ஆதார் அட்டைகள் செல்லாது என்றும் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் குழப்பமும் அச்சமும் நிலவி வருகிறது.
பழைய ஆதார் அட்டை செல்லாதா? உண்மை நிலவரம்
இந்தத் தகவல்கள் முற்றிலும் தவறானவை. உங்களுடைய பழைய ஆதார் அட்டையில் 'Care of' என்ற இடத்தில் தந்தை, கணவர் அல்லது காப்பாளரின் பெயர் இருந்தால், அது 100 சதவீதம் முழுமையாக செல்லுபடியாகும். அரசாங்கமோ அல்லது அதிகாரப்பூர்வ அமைப்போ யாருடைய ஆதார் அட்டையிலும் தன்னிச்சையாக பெயர்களை நீக்கவில்லை.
புதிய மாற்றம் என்ன?
புதிதாக ஆதார் அட்டையினைப் பெறுபவர்கள் மற்றும் முகவரி மாற்றம் செய்வோருக்கான விண்ணப்பப் படிவங்களில் மட்டுமே 'Care of' என்ற பகுதி நீக்கப்பட்டுள்ளது. இனி புதிதாக விண்ணப்பிப்பவர்கள் நேரடியாக 'Care of' தலைப்பின் கீழ் பெயர் சேர்க்க முடியாது.
'Care of' பகுதி நீக்கப்பட்டதன் பின்னணி
பழைய நடைமுறையின் படி, சரியான உறவுமுறை சான்றுகள் இல்லாமலேயே 'Care of' பிரிவில் விருப்பமான பெயர்களை சேர்த்து போலி முகவரிகள் மற்றும் தவறான உறவுமுறைகளில் ஆதார் அட்டைகள் பெறப்பட்ட முறைகேடுகள் கண்டறியப்பட்டன.
அடையாள சான்றாகவும் முகவரி சான்றாகவும் விளங்கும் ஆதாரில் இத்தகைய முறைகேடுகளைத் தடுக்கவே இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
குடும்பத் தலைவர் அடிப்படையிலான புதிய முறை
இனி எதிர்காலத்தில் குடும்பத்தினரின் முகவரியைப் பயன்படுத்தி முகவரி மாற்றம் செய்ய 'HoF' (Head of Family - குடும்பத் தலைவர்) அடிப்படையிலான புதுப்பிப்பு முறை கொண்டுவரப்பட்டுள்ளது.
இணையவழியில் முகவரி மாற்றம் செய்யும் எளிய வழிமுறைகள்:
UIDAI அதிகாரப்பூர்வ இணையதளம்: myaadhar.uidai.gov.in என்ற இணையதள முகவரிக்குச் செல்ல வேண்டும்.
Update Address பகுதிக்குச் சென்று, 'HoF based address update' என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
குடும்பத் தலைவரின் (பெற்றோர் அல்லது கணவர் அல்லது காப்பாளர்) ஆதார் எண்ணை உள்ளீடு செய்து, உறவுமுறையைத் தேர்வு செய்ய வேண்டும்.
ரேஷன் கார்டு, திருமணச் சான்றிதழ் அல்லது பாஸ்போர்ட் ஆகியவற்றில் ஒன்றை உறவுமுறைச் சான்றாகப் பதிவேற்ற வேண்டும்.
இதற்கான நிர்ணயிக்கப்பட்ட கட்டணமான 75 ரூபாயை செலுத்த வேண்டும்.
விண்ணப்பித்தவுடன் குடும்பத் தலைவரின் பதிவுசெய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு அனுப்பப்படும் இணைப்பை (Link) க்ளிக் செய்து 30 நாட்களுக்குள் குடும்பத் தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஒப்புதல் கிடைத்ததும் முகவரி மாற்றம் வெற்றிகரமாக முடிவடையும்.
எனவே, 'Care of' நீக்கம் என்பது போலியான பதிவுகளைத் தடுப்பதற்காக கொண்டுவரப்பட்ட ஒரு தொழில்நுட்ப மாற்றமே தவிர, ஏற்கனவே உள்ள ஆதார் அட்டைகளைப் பாதிக்காது. இதன் காரணமாக வதந்திகளை பொதுமக்கள் நம்பத் தேவையில்லை என்றும் தெரிகிறது.
==============