

பட்டுப் பாரம்பரியம்
IIT Bombay develops Jeevodaya Silk : இந்திய பெண்கள் எத்தகைய புதிய உடைகளை தேடித்தேடி வாங்கி விரும்பி அணிந்தாலும் மனமகிழ் நாட்கள், பண்டிகை காலங்கள் என வரும்போது அணிய விரும்புவது பட்டு சேலையைத்தான்.
இந்தியாவின் பாரம்பரியம் பட்டு சேலைகள்
பட்டு இந்தியாவின் பாரம்பரியம் என்றே சொல்லலாம். பட்டு இழையை பட்டுப்புழுவில் இருந்து பிரிப்பதற்காக , கொதிக்கும் நீரில் போட்டு அதன் பின்புதான் நூலாக மாற்ற முடியும்.
ஆக ஒவ்வொரு பட்டு ஆடைக்கும் பின்னால் பல நூறு பட்டு புழுக்களின் மரணம் நிறைந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.
பட்டுப் புழுக்கள்
பட்டு நூல் தயாரிக்க உதவும் அந்துப்பூச்சுகளின் லார்வாக்கள் தான் பட்டுப்புழுக்கள். இவை மல்பெரி இலைகளை உண்டு, கூகூன்ஸ் எனப்படும் பட்டு கூடுகளை உருவாக்கி பட்டு இழைகளை உற்பத்தி செய்கின்றன.
இந்த புழுக்கள் முதிர்ச்சியடைந்து பட்டுக்கூடுகளை உருவாக்கும் போது ஒரு நிமிடத்திற்கு ஒரு அடி வீதம் என திரவப்பட்டையை வெளியேற்றி அதன்பின்னர் அது காற்றில் கலந்தவுடன் பட்டு நூலாக மாறுகிறது. இந்த செயல்முறையை பட்டுப்புழு வளர்ப்பு என்கின்றனர்.
ஐஐடி ஆராய்ச்சி வெற்றி
மும்பை ஐஐடியின் கிராமப்புற பகுதிகளுக்கான தொழில்நுட்ப மாற்று மையமானது, பட்டு புழுக்களை கொல்லாமல் பட்டு இழைகளை எடுக்க முடியுமா? என கடந்த 3 ஆண்டுகளாக தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தது.
பட்டு புழுக்களை கொல்லாமல் நூல்
இந்நிலையில் கொதிக்கும் நீரில் போடும்போது பட்டுப் புழுக்களை கொல்லாமல் இழைகளை பிரித்தெடுக்கும் மாற்று முறையினை வெற்றிகரமாக கண்டுபிடித்து உள்ளனர். இந்த முறை தொழில்நுட்பத்திற்கு ‘ஜீவோதயா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஜீவோதயா திட்டத்தின் நோக்கம்
இந்த ஜீவோதயா திட்டத்தின் படி, கொதிக்கும் நீரில் பட்டுப்புழுக்களை போடும் போது அவை இறக்காது. மல்மெரி இலைகளை சாப்பிடும் பட்டுப்புழுக்கள் பொதுவாக தங்களைச் சுற்றி சில உருண்டையான கூடுகளை தன்னிச்சையாக கட்டிக்கொள்ளும்.
ஆனால் இந்த ஜீவோதயா திட்டத்தின் படி அந்த உருண்டையான கூடுகளை கட்டிக்கொள்ள விடாமல் சமதள பரப்பில் பட்டு இழைகளை மட்டும் உதிர்க்க சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறதாம். இதனால் பட்டுப்புழுக்களை இனி கொல்ல வேண்டும் என்ற அவசியம் இருக்காது.
மேலும் பட்டுப்புழுக்களும் தங்களின் முழு வாழ்க்கை சுழற்சியை நிறைவு செய்து முழுமையான பட்டுப் பூச்சுகளாக மாறும்.
எதிர்பார்க்கப்படும் அகிம்சை பட்டு
கடந்த 3 ஆண்களாக நடைபெற்ற ஜீவோதயா திட்டம் தற்போது வெற்றி பெற்றுள்ளதையடுத்து, பட்டு விவசாயிகளும் இனிவரும் நாட்களில் அகிம்சை பட்டு உருவாக்கலாம் என்று மகிழ்ச்சியில் உள்ளனர்.
மேலும் மும்பை ஐஐடி ஜீவோதயா திட்டத்திற்கு கோல் இந்திய நிறுவனமானது தனது சமூக பொறுப்புணர்வு நிதியிலிருந்து நிதியுதவி செய்துள்ளது.