

இதய நோய் - எச்சரிக்கும் மருத்துவர்கள்
இன்றைய காலகட்டத்தில் இதய நோயும், இதய அடைப்பும் ரேஷன் கார்டு போல சாதாரணமாக அனைவருக்கும் வரக்கூடிய ஒன்றாக மாறிவிட்டது. இதற்கு நாம் சமையலில் பயன்படுத்தும் எண்ணெய்கள்தான் மிக முக்கிய காரணம் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.
இதய நோய்க்கான காரணம்?
நாம் அன்றாடம் பயன்படுத்தும் சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய்கள் பலவற்றில் எண்ணெய்த்தன்மையே இருப்பதில்லை என்றும், சாலையோர உணவகங்களில் ஒரே எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி உணவுகளைத் தயாரிப்பதே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
ஆரோக்கியமான் எண்ணெய்களின் பட்டியல்
இருப்பினும், தங்களின் உடல்நிலைக்கு ஏற்ப பயன்படுத்துவதற்காக, இதயத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாத சில ஆரோக்கியமான சமையல் எண்ணெய்களை மருத்துவ நிபுணர்கள் பட்டியலிடுகிறார்கள். அவை என்னென்ன என்று விரிவாகப் பார்ப்போம்.
இதயத்திற்கு நன்மை பயக்கும் எண்ணெய்கள்
ஆலிவ் எண்ணெய்
இதய ஆரோக்கியத்திற்கு ஆலிவ் எண்ணெய் முதலிடத்தில் உள்ளது. இதில் உடலுக்கு நன்மை செய்யும் நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சமையலில் பயன்படுத்தினால் இதய நோய்கள் குணமாகும் வாய்ப்புள்ளது.
விலை அதிகமாக இருப்பதால் சமையலில் முழுமையாகப் பயன்படுத்த முடியாவிட்டாலும், நாள்தோறும் ஒரு அரை ஸ்பூன் ஆலிவ் எண்ணெயை உணவில் சேர்த்துக் கொண்டால் இதய நோய்கள் வருவதற்கான அபாயம் ஓரளவுக்குக் குறையும்.
சுத்தமான நெய்
தற்காலத்தில் தூய்மையான நெய் கிடைப்பது அரிதாக இருந்தாலும், சுத்தமான நெய்யை உணவில் சேர்க்கும்போது அது இதயத்திற்கு மிகுந்த நன்மை அளிக்கிறது.
இதிலுள்ள நல்ல கொழுப்பு உடலுக்கு நல்லது. தரமான நெய்யை எப்போதும் அளவோடு சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.
தேங்காய் எண்ணெய்
இதய நிபுணர்கள் பலரும் பரிந்துரைக்கும் எண்ணெய்களில் தேங்காய் எண்ணெயும் ஒன்று. இது உடலில் நல்ல கொழுப்பை உருவாக்க உதவுகிறது.
அன்றாட உணவில் தாளிப்பு போன்ற தேவைகளுக்குக் குறைந்த அளவில் தேங்காய் எண்ணெயைச் சேர்த்துப் பயன்படுத்துவது உடலுக்கு மிகவும் நல்லது.
சோயா எண்ணெய்
சோயா எண்ணெயும் உடலுக்குத் தேவையான நன்மைகளைத் தருகிறது. இதில் ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 ஃபேட்டி ஆசிட் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இது உடலில் அதிகப்படியான கொழுப்பு சேராமல் தடுத்து, இதய நோய் வராமல் பாதுகாக்கிறது.
கடுகு எண்ணெய்
பல ஆண்டுகளாக நம் சமையலறைகளில் பயன்படுத்தப்பட்டு வந்த கடுகு எண்ணெயின் பயன்பாடு தற்போது குறைந்துவிட்டது. ஆனால், சரியான இடைவெளியில் கடுகு எண்ணெயை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு இதய நோய் வருவதற்கான அபாயம் மிகக் குறைவு. வறுவலுக்குப் பயன்படுத்த இது மிகவும் உகந்தது.
எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டிய எண்ணெய்கள்
சூரியகாந்தி எண்ணெய்
சுத்தமான சூரியகாந்தி எண்ணெய்களைச் சமையலுக்குப் பயன்படுத்தலாம் என்றாலும், அதனை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தக் கூடாது.
முக்கியமாக, இந்த எண்ணெயை அதிக சூட்டில் பயன்படுத்தக் கூடாது மற்றும் ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடுபடுத்திப் பயன்படுத்தவே கூடாது.
பாமாயில் (Palm Oil) - மருத்துவர்களின் சிவப்புக்கொடி!
பாமாயிலில் அதிக அளவு கொழுப்பு நிறைந்துள்ளதால், இதய நோய் மருத்துவர்கள் இந்த எண்ணெய்க்குச் 'சிவப்புக்கொடி' காட்டுகிறார்கள் .
எனினும், இதில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் இ ஆகிய சத்துக்கள் கலந்துள்ளன. எனவே, இதனை ஆரோக்கியமானவர்கள் மிகக் குறைந்த அளவில் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
ஆனால், ஏற்கனவே இதய நோய் பாதிப்பு உள்ளவர்கள் பாமாயிலை முற்றிலும் தவிர்த்துவிடுவது நல்லது.
=====