

6G தொழில்நுட்பத்திற்கான புதிய மைல்கல்
இந்தியாவில் 5G சேவை வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், அடுத்த தலைமுறைத் தொழில்நுட்பமான 6G-ஐ நோக்கி இந்தியா தனது கவனத்தைத் திருப்பியுள்ளது. இதற்காக அமெரிக்கா தலைமையிலான 24 நாடுகள் அடங்கிய சர்வதேச 6G தொழில்நுட்பக் கூட்டமைப்பில் இணைய இந்தியா முடிவு செய்துள்ளது.
AI மற்றும் Semiconductor
இந்த நடவடிக்கை நாட்டின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் செமிகண்டெக்டர் (Semiconductor) ஆகிய துறைகளில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் முக்கிய ஒப்பந்தம்
அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தில் உள்ள சேப்பல் ஹில் பகுதியில் நடைபெற்ற G20 புத்தாக்க அமைச்சர்கள் கூட்டத்தில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்தியா இணைவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இதில் பங்கேற்ற இந்தியக் குழுவிற்குத் தலைமை தாங்கிய மத்திய வர்த்தகத் துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாதா மற்றும் அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற இருதரப்புப் பேச்சுவார்த்தையின் முடிவில், இக்கூட்டணியில் இந்தியா அதிகாரப்பூர்வமாக இணைவது உறுதி செய்யப்பட்டது.
செமிகண்டக்டர் மற்றும் AI துறைகளில் விரிவாக்கம்
இச்சந்திப்பின் போது 6G தொழில்நுட்பம் மட்டுமன்றி, செயற்கை நுண்ணறிவு மற்றும் செமிகண்டக்டர்களுக்கான தரவு மையங்கள் அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
குறிப்பாக, 'இந்தியா செமிகண்டக்டர் மிஷன்' (ISM 2.0) திட்டத்தில் அமெரிக்க முதலீடுகளை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை இந்தியத் தரப்பு சுட்டிக்காட்டியது. மின்னணு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் துறைகளின் மூத்த அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.
எதிர்கால டிஜிட்டல் வளர்ச்சி
6G நெட்வொர்க் பயன்பாடானது இணைய வேகத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், ரோபோட்டிக்ஸ் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களின் பயன்பாட்டையும் அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும்.
உலகளாவிய தொழில்நுட்ப முன்னேற்றத்தில் இந்தியாவின் பங்கை வலுப்படுத்தவும், குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தவும் இக்கூட்டணி பெரிதும் துணைபுரியும்.
இதையும் படிங்க: 2030-க்குள் AI-ஆல் மனிதகுலம் அழியும் அபாயம் : OpenAI மற்றும் Anthropic ஆய்வாளர் எச்சரிக்கை!
=====