பசியாற சோறு... ஒரு நடிகர் சேவகரான கதை!

Raja Sethu Murali's Pasiyara Soru in Kovai : பசித்தவர்களுக்கு உணவளிப்பது, ஆதரவற்றவர்கள் மரணித்தால் தனது சொந்த செலவில் நல்லடக்கம் செய்வது போன்ற பணிகளை தனி மனிதனாக செய்து வருகிறார் ராஜாசேது முரளி
Coimbatore Raja Sethu Murali's Pasiyara Soru in Kovai
Coimbatore Raja Sethu Murali's Pasiyara Soru in Kovai
2 min read

Raja Sethu Murali's Pasiyara Soru in Kovai : இயக்குனர் பாலா இயக்கிய நான் கடவுள் திரைப்படத்தில் வரும் காவல்நிலைய காமெடியை பார்த்து ரசிக்காதவர்கள் இருந்திருக்க முடியாது. எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற முன்னணி நடிகர்களை தத்ரூபமாக நடித்துக் காட்டும் டூப் நடிகர்கள் மத்தியில் சார் அந்த நயன்தாராவை ஆடச் சொல்லுங்க சார் என்று வரும் குரலுக்கு பின்னால், நளினமாக குத்தாட்டம் போட்டது வேறு யாரும் இல்லை, பசித்தவர்களுக்கு அட்சய பாத்திரமாக ஓடோடிச் சென்று பசியைப் போக்கும் "பசியாற சோறு" எனும் தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் சமூக சேவகர் ராஜாசேது முரளி தான்.

பசியின் கொடுமையை அறிந்தவனுக்குத் தான் பசியைப் பற்றி தெரியும் என்பது போல, சினிமா மீது கொண்ட காதலால் சென்னைக்கு வந்த ராஜாசேது முரளி, பலகட்ட போராட்டங்களுக்கு பின்னர், சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடத்திருந்தாலும், பசியும் பட்டினியும் அவரை பாடாய் படுத்தியது. இன்றைக்கு எப்படியாவது சாப்பிட்டு விடவேண்டும் என்று எண்ணியவருக்கு, கோடம்பாக்கத்தை சுற்றியுள்ள திருமண மண்டபங்களே அன்னச்சத்திரமாக காட்சி அளித்துள்ளது. ஒரு கட்டத்தில் அடித்து விரட்டப்பட்டவர், சமையல் மாஸ்டர்களாலும், பந்தியில் பரிமாறும் நபர்களாலும் பல நாட்களை கடத்தினார். ஒரு வழியாக சென்னை நமக்கு சரிப்பட்டு வராது என்பதை உணர்ந்து, கோயம்புத்தூருக்கு குடியை மாற்றினார். அப்போது தான் அவருக்கு உதயமானது, நம்மைப் போன்று சாப்பாட்டிற்கு வழியில்லாமல் எத்தனை எத்தனை ஜீவன்கள் அன்றாடம் அல்லால் படுகின்றன என்று.

அதில் உதித்தது தான் "பசியாற சோறு" எனும் தொண்டு நிறுவனம். கையில் காசு பணம் இல்லாவிட்டாலும், திருமண மண்டபங்கள், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களை தேடிச் சென்று அங்கு மீதமாகும் உணவுகளை சேகரித்துக் கொண்டு உணவுக்காக ஏங்கும் மக்களிடம் கொண்டு சேர்த்தார்.

இந்த இணைப்பு பாலம் தான் இன்று அவரை இறைக்கு நிகராக வைத்துள்ளது. பசித்தவர்களுக்கும், பாழாகும் உணவுக்கும் இடையில் ராஜாசேது முரளி பாலமாக இருந்து செயல்பட்டு வருகிறார். சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த சேவை இன்று பசியாற சோறு எனும் வாகனத்தில் வரும் உணவை வாங்குவதற்கு வரிசை கட்டி நிற்கின்றது.

அங்காங்கே கிடைக்கக்கூடிய அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட உணவு தானியங்களை இல்லாதவர்களின் வீடுதேடி சென்று வாரி வழங்கிவரும் ராஜாசேது முரளி, வசதிவாய்ப்பில்லாத இளம்பெண்களின் வளைகாப்பையும் தனது சொந்த செலவில் செய்து வைக்கிறார்.

பசித்தவர்களுக்கு உணவளிப்பதுஎன்பது ஒரு ரகம் என்றால், கவனிக்க ஆளில்லாத ஆதரவற்றவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பது, ஆதரவற்றவர்கள் மரணித்தால் தனது சொந்த செலவில் நல்லடக்கம் செய்வது போன்ற பணிகளை தனி மனிதனாக செய்து வருகிறார் ராஜாசேது முரளி.

மக்களின் வரிப்பணத்தில் தெருவிளக்கு போட்டாலே ஊரையே கூப்பிட்டு விளம்பரப்படுத்தும் இந்த நாட்டில், சத்தமே இல்லாமல் சகல சேவைகளையும் செய்துகொண்டிருக்கும் ராஜாசேது முரளிக்கு பாராட்டுகளும், விருதுகளும் கிடைக்காவிட்டாலும் நம்முடைய கைத்தட்டவது கிடைத்தால் அவர் இன்னும் உற்சாகமாக உணவிட்டு மகிழ்வார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in