

சபரிமலையில் தபால் நிலையம்
Sabarimala Post Office Darshan Booking 2025 : சபரிமலையில் சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் தபால் நிலையம் பற்றி பெரிதளவு பக்தர்கள் யாருக்கும் தெரிந்திருக்காது. உலக புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்களுக்கும், 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தபால் மூலம் பக்தர்களுக்கு அருள்
இதனால் ஏராளமான பெண் ஐயப்ப பக்தர்கள் அவரின் அருளை பெற காத்து கொண்டிருப்பார்கள். இப்படி இருக்கையில் தபால் மூலம் அவரின் அருள் பல பக்தர்களுக்கு கிடைத்து கொண்டிருக்கிறது(Sabarimala Darshan Through Post Office) என்று சிலர் அறிந்ததே.
ஐயப்பனுக்கு தனி பின்கோடு
இந்திய நாட்டிலேயே தபால் துறையில் இரண்டு பேருக்கு மட்டுமே தனி பின் கோடு உள்ளது. ஒன்று இந்திய ஜனாதிபதிக்கும் அடுத்தது சபரிமலை ஐயப்பனுக்கு தான். 62 ஆண்டுகளாக சன்னிதானத்தில் தபால் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் சிறப்பு என்னவென்றால் நாட்டிலேயே மண்டல பூஜை, மகர விளக்கு பூஜையின் போது மட்டுமே செயல்படும்.
ஐயப்ப உலோகம் பதித்த முத்திரை
சபரிமலை சன்னிதானத்தில் மாளிகைபுரம் கோயில் அருகே செயல்படும் இந்தத் தபால் நிலையம் 1963- ஆம் ஆண்டு மண்டல பூஜையின்போது நவம்பர் 16-இல் திறக்கப்பட்டது. கடந்த 62 ஆண்டுகளாக மண்டல காலங்களில் மட்டும் செயல்படுகிறது.
சபரிமலைக்கு தனி முத்திரை
தபால் அலுவலகங்களில் ஒரே மாதிரியான முத்திரைத்தாள் பயன்படுத்தப்படும். ஆனால் சபரிமலைக்கு தனி முத்திரை வழங்கப்பட்டுள்ளது. இங்கு பயன்படுத்தப்படும் மஞ்சள் முத்திரையில் சபரிமலையின் பதினெட்டாம்படி, ஐயப்பன் சிலை உலோகத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த உலோக அஞ்சல் முத்திரை 1974- ஆம் ஆண்டு முதல் சந்நிதானம் தபால் நிலையத்தில் அமலுக்கு வந்தது . இதுபோன்று உலகத்தில் வேறு எங்கும் பயன்படுத்துவதில்லை.
ஐயப்பன் பெயருக்கு கடிதங்கள்
அதேபோல், "68 97 13' என்ற தனி பின்கோடு எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் கடிதங்கள் ஒரே ஒருவர் பெயருக்குதான் வருகின்றன. அதாவது ஐயப்பன் பெயரில் சபரிமலைக்குச் சென்று ஐயப்பனை தரிசிக்க முடியாதவர்கள், கடிதங்கள் வாயிலாக ஐயப்பனிடம் முறையிடுகின்றனர்.
பக்தர்களுக்கு சபரிமலை பிரசாதம்
காணிக்கைகளை மணியார்டர் மூலம் அனுப்புகின்றனர். இந்தத் தபால்களும் மணியார்டர்களும் ஐயப்பன் சந்நிதியில் வைத்து பூஜிக்கப்பட்டு, தபால் நிலையத்தில் ஒப்படைக்கப்படும். மேலும், சபரிமலை பிரசாதங்கள் இந்தத் தபால் நிலையம் மூலம் அனுப்பப்படுகிறது.
இன்லேன்ட்ட லெட்டரை வாங்கி செல்லும் பக்தர்கள்
சபரிமலை தபால் நிலைய முத்திரை தங்கள் வீடு தேடி வருவதை புனிதமாகவே பக்தர்கள் கருதுகின்றனர். ஐயப்பன் முத்திரையுடன் கூடிய அஞ்சல் அட்டைகள், இன்லேன்ட் லெட்டர்கள் ஆகியவற்றையும் சபரிமலை யாத்திரை நினைவாக பக்தர்கள் வாங்கி செல்கின்றனர்.
அனுபவங்களை எழுதி வீட்டுக்கு அனுப்பும் பக்தர்கள்
மேலும் ஐயப்பனுக்கு கடிதங்கள் குவியும் போலவே ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் மேற்கொண்ட பிறகு தங்களது அனுபவங்கள் சபரிமலையில் உள்ள தபால் நிலையத்தில் இருந்து இன்லென்ட், போஸ்ட் கார்டுகள் வாங்கி அதில் பதிவு செய்து தங்களது முகவரிக்கே சபரிமலை தபால் நிலையத்தில் இருந்து அனுப்புவதும் வழக்கமாக உள்ளது.
ஐயப்ப சுவாமி முத்திரைகள் தனியாக இருக்கும்
மேலும் தற்போது மற்ற தபால் நிலையங்களில் உள்ளது போல இங்கும் அட்வான்ஸ் போஸ்ட்டல் டெக்னாலஜி ( APT ) தொழில் நுட்ப வசதியும் இங்கு உள்ளது. இந்த சீசன் தொடங்கி இதுவரை 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடிதங்கள் இந்த தபால் நிலையத்தில் இருந்து பக்தர்கள் அனுப்பி உள்ளதாக இங்குள்ள போஸ்ட் மாஸ்டர் ஷிபு கூறி உள்ளார்.
போஸ்ட் மாஸ்டர்-ஐ தவிர ஒரு போஸ்ட் மேன், மற்றும் இரண்டு உதவியாளர்களும் இங்கு பணியாற்றி வருவதாக தெரிகிறது. இங்கு "இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி' வசதியும் உள்ளது. மகர விளக்கு பூஜைக்கு பிறகு இந்தத் தபால் நிலையம் மூடப்பட்டுவிடும்.
முத்திரைகள் பம்பாவில் தனி அறையில் வைத்து பூட்டி பத்திரமாகப் பாதுகாக்கப்படும் என்று சபரிமலை தரப்பில் தெரியவருகிறது.
Sabarimala Post Office Address :
Swamy Ayyappan,
Sabarimala PO,
Kerala, INDIA
PIN - 689713.
சபரிமலை தபால் அலுவலக முகவரி :
ஐயப்பசுவாமி,
சபரிமலை சன்னிதானம் அஞ்சல்,
கேரளா, இந்தியா
பின்: 689713