சபரிமலை ஐயப்ப தரிசனம்
Sabarimala Income Revenue 2025 Mandala Makaravilakku Season : கார்த்திகை, மார்கழி என்றால் ஐயப்ப பக்தர்கள் மாலையிட்டு விரதம் இருந்து சபரிமலை செல்வர். அப்படி வழக்கம்போல், இந்த ஆண்ட கார்த்திகை மார்கழி முதலே ஐயப்ப பக்தர்கள் சபரிமலை செல்ல ஆரம்பித்தனர். ஆனால், இந்த ஆண்டு சபரிமலை கூட்டம் அலைமோதியது. இதனால், பக்தர்கள் பாதியிலேயே பயணங்களை முடித்து கொண்டு திரும்பி செல்கின்றனர் என்ற தகவல் பரவி வந்தது.
இப்படி ஒவ்வொரு பிரச்னைகளாக உருவாகி வந்த நிலையில், இதுகுறித்து கேரள உயர்நீதிமன்றம் விசாரித்து சில நிபந்தனைகளை வழங்கி தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து சமீப காலத்திற்கு முன்பு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் ஜெயக்குமார் அவ்வப்போது சிலவற்றை மாற்றி அமைத்து, புதிய விதிமுறைகள் முயற்சிகளையும் தெரிவித்து வருகிறார்.
ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பு
அதன்படி தற்போது ஐயப்பன் சன்னிதானத்தில் செய்தியாளர்களை சந்தித்த கே.ஜெயக்குமார் சன்னிதானத்தில் அறை எடுத்து தங்கும் பக்தர்களுக்கு முன்பணம் திரும்ப வழங்க தனி கவுன்டர் திறக்கப்படும். ஆன்லைனில் முன்பதிவு செய்யும்போது செலுத்தும் முன் பணத்தை அவர்களது வங்கிக் கணக்கிலேயே செலுத்தும் வகையில் மென்பொருளில் மாற்றம் செய்யப்படும்.ஒரு பக்தருக்கு 20 டின் அரவணை என்பது தொடரும். எல்லோருக்கும் அரவணை கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மொத்த வருவாயாக 210 கோடி
மேலும், டிச.,27-ல் மண்டல பூஜை முடிந்து நடை அடைக்கப்பட்டதும் மூன்று தினங்களில் முடிந்த அளவு அரவணை உற்பத்தி செய்யப்பட்டு இருப்பு வைக்கப்படும். சீசன் தொடக்கத்தில் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் அரவணை வழங்கப்பட்டது. ஆனால் எந்த ஆண்டும் இல்லாத அளவு அரவணை விற்பனை பல மடங்கு அதிகரித்ததால் கையிருப்பு குறைந்தது.
ஒரு நாள் மூன்றரை லட்சம் டின் அரவணை விற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நான்கரை லட்சம் டின் அரவணை விற்பனை ஆகிறது. தற்போது தினமும் 2.5 லட்சம் அரவணை உற்பத்தி செய்யப்படுகிறது. ஏற்கனவே இருப்பில் உள்ள ஒரு லட்சம் டின் அரவணை எடுக்கப்படுகிறது. மகர விளக்கு காலத்தில் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள் பற்றி ஆலோசிப்பதற்காக டிச.26 - ம் தேதி அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். மண்டல காலத்தில் இதுவரை மொத்த வருவாய் 210 கோடி. அதில் அரவணை விற்பனையில் 106 கோடி ரூபாய் கிடைத்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.