

ஐயப்பன் கோவில் நடை திறப்பு
Sabarimala Ayyappa Temple Pilgrims Crowd 2025 : கார்த்திகை, மார்கழி என்றால் மாலை போடுவது விரதம் என எங்கும் பக்தி பாடல்கள் ஒலிக்கும். இந்நிலையில், தற்போது அனைவரும் ஐயப்ப சுவாமிக்கு மாலையிட்டு, விரதம் இருந்து வருகின்றனர். வழக்கம் போல் கார்த்திகை முதல்நாளில் இருந்து சபரிமலையில் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
பந்தளத்தில் பயணத்தை முடிக்கும் பக்தர்கள்
பக்தர்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்படுவதால் பெரும் சிரமத்திற்கு ஆளாக்கப்படுகின்றனர். இதனால், பக்தர்கள் ஐயப்ப சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் பந்தளத்தில் தங்கள் பயணத்தை முடித்துள்ளனர். சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் நேற்று முன் தினம் காலை துவங்கியது. இதற்காக நவ.,16 மாலை நடை திறந்தது முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
பாதியில் நிறுத்தப்படும் பக்தர்கள்
சபரிமலை ஆன்லைன் முன்பதிவு மூலம் தினமும் 70,000 பேரும், ஸ்பாட் புக்கிங்கில் 20,000 பேரும் அனுமதிக்கப்படுவர் என, அறிவிக்கப்பட்டிருந்தது. முன்பதிவு துவங்கிய சில நாட்களிலேயே நவ., மாதத்தின் அனைத்து நாட்களிலும் முன்பதிவு நிறைவு பெற்றது. தற்போது டிச.,10 வரையிலும் முன்பதிவு நிறைவு பெற்றுள்ளது. கார்த்திகை 1ம் தேதியான நேற்று முன்தினமே, பம்பையிலும், சன்னிதானத்திலும் கூட்டத்தை கட்டுப்படுத்த போதிய திட்டமிடல்கள் இல்லாததால், எருமேலியில் இருந்து சென்ற பக்தர்கள் சன்னிதானம் வர முடியாமல், பாதி வழியில் நிறுத்தப்பட்டனர்.
8 மணி நேரமாக ஒரே இடத்தில் பக்தர்கள்
பம்பையில் பல மணி நேரம் காத்திருந்த பின்னரே மலை ஏற அனுமதிக்கப்பட்டனர். இந்நிலை நேற்றும் நீடித்தது. எட்டு மணி நேரம் வரிசையில் நிற்கும் பகுதியில் தண்ணீர் இல்லை, உணவு இல்லை என, பக்தர்கள் குமுறுகின்றனர். கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் தலைமையிலான அரசும், கோவில் நிர்வாகமும் பக்தர்கள் குறித்து கவலைப்படவில்லை என்று பக்தர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
மேலும், எந்த அடிப்படை வசதியும் செய்யவில்லை. வாகனங்களை, பக்தர்களை ஒழுங்குப்படுத்த போதிய காவல்துறையினர் இல்லை ' என, பக்தர்கள் குற்றம் சாட்டிவருகின்றனர். சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் ஏற்பட்ட கூட்ட நெரிசலால், தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் பந்தளத்தில் உள்ள கோவிலில் பயணத்தை முடித்து செல்கின்றனர் .
திருவாதங்கூர் தலைவர் ஜெயக்குமார் பேச்சு
இதுகுறித்து, திருவிதாங்கூர் தேவசம் போர்டு புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள கே.ஜெயக்குமார் கூறியதாவது: பம்பையில் பக்தர்களை அதிக நேரம் காத்திருக்க வைக்காமல் மலையேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பம்பையில் இருக்கும் பக்தர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, நிலக்கல்லில் இருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்படும்.
அரை நாளில் 96 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள்
மேலும், மரக்கூட்டம் முதல் சரங்குத்தி வரை, 20 கியூ காம்ப்ளக்ஸ்கள் உள்ளன. இங்கு பக்தர்கள் ஓய்வெடுக்க வசதி செய்யப்பட்டு, அங்கு தண்ணீர், பிஸ்கட் வழங்கப்படும். குடிநீர் மற்றும் பிஸ்கட் வழங்குவதில் 200 ஊழியர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஸ்பாட் புக்கிங் செய்வதற்காக பம்பையில் அதிக பக்தர்கள் வருவதை கட்டுப்படுத்துவதற்கு, நிலக்கல்லில் உடனடியாக ஏழு கவுன்டர்கள் திறக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். சபரிமலையில் நவ.,16- மாலை 5:00 மணி முதல் நேற்று மதியம், 12:00 மணிவரை, ஒரு லட்சத்து 96,594 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
முன்னேற்பாடு கூட்டம் ஏதும் நடைபெறவில்லை
வழக்கமாக சீசன் துவங்க ஒரு மாதம் முன், கோவில் நிர்வாகம் அமைச்சர் உள்ளிட்ட பல்துறை அமைச்சர்கள், பம்பையில் கூடி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, ஏற்பாடுகளை முடுக்கி விடுவது வழக்கம். இந்த ஆண்டு அதுபோன்ற முன்னேற்பாடு கூட்டம் ஏதும் நடைபெறவில்லை.
கார்த்திகை முதல் தேதி நடை திறந்த போது, தேவசம்போர்டு அமைச்சர் சன்னிதானம் வந்து அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தை நடத்தி, ஆலோசனைகளை வழங்குவார். இந்தாண்டு, மார்க்சிஸ்ட் கட்சி அமைச்சர் வாசவன் சன்னிதானத்துக்கு வரவில்லை. அவர் தரிசனம் செய்யாவிட்டாலும், பக்தர்களுக்கான ஏற்பாடுகளை கவனிக்க வந்திருக்க வேண்டும்.
திட்டமிடாததே குழப்பத்திற்கு காரணம்
தேவஸ்தான போர்டின் பதவி காலம் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நவ.,15ல் நிறைவு பெறுகிறது. இதனால், இந்தாண்டு பதவி விலகி செல்லும் தலைவர், உறுப்பினர்கள், சீசன் முன்னேற்பாடுகளில் போதிய கவனம் செலுத்தவில்லை.
புதிதாக பொறுப்பு ஏற்பவர்களுக்கு, இரண்டு நாட்களுக்குள் நடை திறக்கும் போது, இங்கு என்ன செய்ய வேண்டும் என்பதில் எந்த திட்டமிடலும் இருக்காது. இந்தாண்டு குழப்பத்திற்கு இதுவும் காரணம்.
பாதுகாப்பு படை பிரிவுகள் வரவில்லை
மத்திய படை என்னாச்சு? மண்டல, மகர விளக்கு சீசனில் மத்திய அதிவிரைவு படை போலீசாரும், தேசிய பேரிடர் நிவாரண படை வீரர்களும் பணியில் ஈடுபடுத்தப்படுவர். ஆனால் நேற்று வரை இவர்கள் வரவில்லை.
கேரள அரசு தரப்பில் இருந்து கடிதம் தாமதமாக சென்றதாலும், பீஹார் தேர்தல் மற்றும் டில்லி குண்டு வெடிப்பை தொடர்ந்து, பாதுகாப்பு பணியில் இவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாலும் வருவது தாமதமாவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது சபரிமலை நிலை கருதி, பக்தர்கள் அதற்கேற்றார் போல் சென்று சுவாமி தரிசனம் செய்ய வருவது நல்லது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
===