

அன்னாவிஷேகம் வரலாறு
Aippasi Annabhishekam 2025 History in Tamil : நமக்கு உணவு தரும் சிவனுக்கே அரிசி உணவை அபிஷேகம் செய்து படைக்கும் விழா தான் அன்னாபிஷேகம். நாளை (புதன்கிழமை) தமிழகம் முழுவதும் சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது. ஐப்பசி மாதப் பவுர்ணமி தினத்தன்று சகல சிவாலயங்களிலும் சிவபெருமானின் அருவுருவமான லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகின்றது.
அமிர்த கலையில் விளங்கும் சந்திரன்
பௌர்ணமி அன்று சந்திரன் தனது பதினாறு கலைகளுடன் முழுமையான அழகுடன் விளங்குகின்றான் அன்று அவனது கலை அமிர்த கலையாகும் என்று ஆன்மீக ரீதியாக சொல்லப்படும் அத்தகைய ஐப்பசி பவுர்ணமியன்று அறுவடையான புது நெல்லைக் கொண்டு அன்னம் படைத்து சிவனுக்கு அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு அன்னதானமாக அளிப்பது பெரும் புண்ணியத்தை தர வல்லதாகும்.
அப்பர் பெருமான்
வருடாந்தோறும் அன்னாபிஷேகத்தை சிதம்பரத்தில் தினமும் காலை 11 மணியளவில் ரத்ன சபாபதிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்று அந்த அன்னம் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. எனவேதான் இத்தலத்தை அப்பர் பெருமான் அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் என்று சிறப்பித்துப் பாடினார் என்று வரலாறு கூறுகிறது.
ஒவ்வொரு பருக்கையும் ஒரு சிவன்
இந்த அன்னாபிஷேகத்தை தரிசித்து பிரசாதத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு என்றுமே அன்ன ஆகாரத்திற்கு கவலையே இல்லை. அன்னாபிஷேகத்தன்று சிவபெருமானின் மேனியிலே சாற்றப்படுகின்ற ஒவ்வொரு பருக்கை சோறும் ஒரு சிவலிங்கம் என்று கருதப்படுகிறது. எனவே அன்று அன்னாபிஷேக கோலத்தில் சிவதரிசனம் செய்தால் கோடி சிவதரிசனம் செய்வதற்கு சமம் ஆகும் என்று கூறப்படுகிறது.
சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம்
இதையே சோறு கண்ட இடம் சொர்க்கம் என்றும் சொல்வார்கள். குறிப்பாக, சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது அதிக சிறப்புடையதாகும். ஐப்பசி மாதம் அஸ்வினி நட்சத்திரத்திற்குரிய அன்னத்தால் வழிபடுவது சிறப்பானது. முறையாக சிவபெருமானுக்கு ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகம் முழுவதும் சுபிட்சமாக விளங்கும் என்று சிவாகமம் கூறுகின்றது.
இதுவே அன்னாபிஷேகம்
அன்னாபிஷேகம் செய்த சாதத்தை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் உண்டால் பலன் நிச்சயம் உண்டு என்பது ஐதீகம். அன்னாபிஷேகம் எவ்வாறு நடைபெறுகின்றது என்று தெரியுமா? ஐப்பசி பவுர்ணமியன்று காலையிலே எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். பின் சிவபெருமானின் திருமேனி முழுவதும் அன்னம் வடித்து லிங்கம் முழுவதும் மறையும் அளவிற்கு சாற்றுவார்கள். இது அன்னாபிஷேகம் எனப்படுகின்றது.
நீர்வாழ் உயிரினத்திற்கு பிரசாதம்
இரண்டாம் கால அன்னாபிஷேக பூஜை முடிந்த பின் அன்னம் கலைக்கப்பட்டு பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றது. பொதுவாக அபிஷேகம் செய்யப்பட்ட அன்னத்தை ஓடும் நீரில் கரைத்து விடுவது வழக்கம். குறிப்பாக லிங்கத்தின் மீது இருக்கும் அன்னத்தை விடுத்து மற்ற இடங்களில் உள்ள அன்னத்தை எடுத்து தயிர் கலந்து பிரசாதமாக கொடுப்பார்கள். மீதமான அன்னம் திருக்குளத்திலோ அல்லது கடலிலோ கரைக்கப்படும். சிவபெருமானின் அருட்பிரசாதம் நீர்வாழ் உயிரினங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதால் இவ்விதம் செய்யப்படுகின்றது.
காலையிலே அன்னாபிஷேகம்
தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் மற்றும் கங்கை கொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயங்களில் சிவபெருமானின் லிங்கத் திருமேனி பெயருக்கேற்றார்ப் போல பெரியதாகியதால் (கங்கை கொண்ட சோழபுரத்தின் லிங்கத்தின் ஆவுடை 43 முழம் நீளம்.) காலையிலேயே அன்னாபிஷேகம் தொடங்கிவிடும்.
100 மூடை நெற்களும் பிரசாதம்
புது அறுவடையான அரிசி மூட்டை மூட்டையாக வந்து குவிந்து விடும். 100 மூட்டை வரை அபிஷேகத்திற்காக தேவைப்படுகின்றது, உழவர் பெருமக்கள் நெல்லை கோவிலுக்கு இலவசமாக வழங்குவார்கள். அத்தனை அன்னமும் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படும். அவ்வரிசியைக் கண்டு சமைக்கப்பட்ட அன்னம் கொப்பரை கொப்பரையாக கொண்டு வந்து சிவபெருமானின் திருமேனி மேல் சிறிது சிறிதாக சாற்றப்படும். சிவபெருமானின் திருமேனி முழுவதும் அன்னாபிஷேகம் ஆக மாலை ஆகும். பின்னர் மாலை பூஜைகள் முடிந்து அர்த்த சாமத்திற்கு பின் அன்னம் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படும்.
திருநீறு அபிஷேகத்தில் தொடங்கி முடியும் அன்னாபிஷேகம்
அன்னாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெறும் மற்றோர் தலம், குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகில் உள்ள செந்தலை என்னும் தலம் ஆகும். அன்னாபிஷேகத்தன்று பகல் 11 மணிக்கு முதலில் திருநீற்றால் அபிஷேகம்(Annabhishekam Sivan Kovil Time) நடைபெறும். பிறகு மற்ற திரவியங்களால் எப்போதும் போல அபிஷேகங்கள் நடைபெறும். மாலை ஐந்து மணிக்கு சிவபெருமானின் திருமேனி முழுவதும் அன்னத்தாலும் மற்றும் காய்கறிகளாலும் அலங்காரம் செய்யப்படும். பூர்ண அலங்கரத்தில் விளங்கும் பெருமானுக்கு சோடச உபசாரங்களும் சிறப்பு தீப ஆராதனையும் நடைபெறும்.
அர்த்த சாமத்தில் வழிபாடு
இரவு 9 மணி அளவில் மீனாட்சி சுந்தரேஸ்வரரின் அன்னாபிஷேக திருமேனியின் மீது பூரண சந்திரன், தனக்கு சாப விமோசனம் அளித்து தன்னை ஜடா முடியிலே சூடிக் கொண்ட அந்த சந்திரசேகரனை தனது அமிர்த கலைகளால் தழுவுவான். இத்தலத்தின் சிறப்பு இது தான் அன்னாபிஷேகம் செய்யப்பட்ட இறைவனை சந்திரன் தனது அமுத தரைகளால் தழுவி பூஜை செய்கிறான். இவ்வாறு சந்திரன் வழிபடும் மீனாட்சி சுந்தரேஸ்வரரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் செந்தலையில் கூடி அர்த்த சாம பூஜையில் பெருமானை வழிபட்டு அன்னாபிஷேக நாளன்று நன்மை அடைகின்றனர்.