
ஏ ஆர் ரஹ்மான் இளையராஜவிடம் உதவியாளராகப் பணிபுரிந்தார் என்கிற செய்தியைப் பகிரும் சில காணொலிகளை அண்மையில் சமூக ஊடகங்களில் பார்த்தேன்.
இது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட ஒரு தகவல்.
முதலில் இளையராஜா போன்ற ஒருவருக்கு உதவி இசையமைப்பாளர் என்பவரே தேவையில்லை என்பதை அறிவீர்கள். எங்கெல்லாம் அவருக்கு உதவினார்கள் என்பதை சிலர் அறிந்திருக்கலாம்.
அன்றைய பாடல் பதிவுக்குத் தேவைப்படுகிற இசைக்கருவிகள் மற்றும் பாடகர்களை ஏற்பாடு செய்கிறவர் (Arranger), அவர் எழுதுகிற இசைக்குறிப்புகளை எல்லாருக்கும் பிரித்துக் கொடுப்பவர், பதிவின்போது கூடத்துக்குள் நின்று இசைக்குழுவினரை நடத்துபவர் (Conductor) என இவர்கள்தான் அவர் உதவியாளர்கள்.
இந்த நடத்துனர் பணியை வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு கலைஞர்கள் செய்திருக்கின்றனர் - கோவர்த்தனம், நரசிம்மன் தொடங்கி தினா வரை. Drums கலைஞர் புருஷோத்தமன் அவருடைய குழுவைச் சேர்ந்த நடத்துனர்.
நிரந்தமாக அவரிடம் இசைக்கருவிகள் வாசித்த இசைக்கலைஞரும் உண்டு, அவ்வப்பொழுது வந்துபோகிற கலைஞரும் உண்டும். விஜி மானுவேல், புருஷோத்தமன், குணசிங், சுதாகர், சந்தானம், சசி, நெப்போலியன் (அருண்மொழி), சபேஷ், முரளி, சிவா, பரணி அவருடைய ஆஸ்தான கலைஞரில் சிலர்.
ரஹ்மான் (Keybaords), சிவமணி (Drums) போன்று அவ்வப்பொழுது வந்துபோகிற கலைஞர் பலர் உண்டு.
ரஹ்மான் இசைக் கம்ப்யூட்டர் வாங்கிய முதல் இசைக்கலைஞன் என்பதால் அவர் அந்தக் கட்டத்தில் அழைக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் (சுமாராக 100 படங்கள்) இளையராஜாவின் பாடல் பதிவுகளில் பணிபுரிந்தார்.
இவ்வாறு அந்தப்பதிவில் ஜேம்ஸ் வசந்தன் குறிப்பிட்டுள்ளார்.