
கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் விடுத்துள்ள அறிக்கை :
Vanathi Srinivasan on ABVP Foundation Day 2025 : சுதந்திரம் கிடைத்த இரண்டு ஆண்டுகளுக்குள், அதாவது 1949 ஜூலை 9 அன்று ஏ.பி.வி.பி. தொடங்கப்பட்டது. மகாத்மா காந்தி படுகொலைக்குப் பிறகு, ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டு மிகப்பெரிய நெருக்கடிகளையும் சோதனைகளையும் எதிர்கொண்டிருந்த காலகட்டத்தில் இது நிகழ்ந்தது.
காங்கிரஸ் அரசின் அடக்குமுறைகளை எதிர்கொண்டு, நெருப்பாற்றில் நீந்தி, ஏபிவிபி படிப்படியாக வளர்ந்து வந்தது. ஆட்சி அதிகாரம் காங்கிரஸிடம் இருந்தாலும், கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் கம்யூனிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் இருந்தன. கம்யூனிஸ்டுகள், கல்வி வளாகங்களில் ஏபிவிபியை அனுமதிக்காமல் சர்வாதிகாரத்துடன் நடந்து கொண்டனர். பொதுவாக, உலக வரலாற்றில் ஒரு அரசியல் கட்சி உருவாகி, அதன்பிறகே அதன் மாணவர் அமைப்பு தொடங்கப்படும். ஆனால், ஏபிவிபி என்ற மாணவர் அமைப்பு தொடங்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகே பாரதிய ஜனசங்கம் என்ற அரசியல் கட்சி உருவாக்கப்பட்டது.
ஜனசங்கத்தின் வளர்ச்சியிலும், பின்னர் உருவான பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) வளர்ச்சியிலும் ஏபிவிபிக்கு முக்கியப் பங்கு உண்டு. பாஜகவில் முக்கியத் தலைவர்களாகவும், மத்திய அமைச்சர்களாகவும் இருந்த பலர் ஏபிவிபியால் உருவாக்கப்பட்டவர்கள். முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ், அனந்தகுமார், இன்றைய பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் போன்றவர்கள் ஏபிவிபி வழியாக அரசியலுக்கு வந்தவர்கள்.
இந்தியாவின் கல்வி வளாகங்களில் கம்யூனிஸ்டுகளின் ஆதிக்கத்தை ஒழித்து, இடதுசாரி மோகத்தில் இருந்த மாணவர்களை தேசியவாதத்தின் பக்கம் திருப்பியது, தெலங்கானா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் நக்சல்களுக்கு எதிராகப் போராடி அவர்களின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர உதவியது, அரசியல் களத்தில் காங்கிரஸையும் கம்யூனிஸ்டுகளையும் வீழ்த்த இளைஞர்களையும் இளம் பெண்களையும் அணி திரட்டியது என ஏபிவிபியின் சாதனைகளைப் பட்டியலிடலாம்.
கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் படிக்கும்போது ஏபிவிபி அமைப்புடன் ஏற்பட்ட தொடர்பே, இன்று என்னை(Vanathi Srinivasan) பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிரணித் தலைவராக உயர்த்தியுள்ளது. ஒரு குக்கிராமத்தில் பிறந்து, எந்தவித அரசியல் பின்னணியும் இல்லாத நான், அரசியல் களத்தில் படிப்படியாக வளர்ந்து இந்த இடத்தை அடைந்ததற்கு ஏபிவிபியே காரணம்.
76 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்து, 77வது ஆண்டில் அடியெடுத்து(ABVP 77th Year Anniversary) வைக்கும் இந்நாளில், ஏபிவிபி தொடங்கக் காரணமாக இருந்த எங்களின் கொள்கை ஆசான் ஆர்.எஸ்.எஸ். இரண்டாம் தலைவர் குருஜி கோல்வால்கர், ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் தத்தோபந்த் தெங்கடி, ஏபிவிபியின் முதல் பொதுச் செயலாளர் பேராசிரியர் யஸ்வந்த்ராவ் கேல்கர் உள்ளிட்ட அனைவரையும் நினைவு கூர்ந்து, அவர்களின் வழியில் என்றும் பயணிக்க உறுதியேற்போம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.