

தவெகவில் செங்கோட்டையன்
Actor Vijay Released Video on Sengottaiyan Join TVK : அதிமுகவில் இருந்து கட்சி பதவி பறிக்கப்பட்ட நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுடன் அவருடைய ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில், தொடர்ந்து மவுனம் காத்து வந்த கே.ஏ.செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் நடிகர் விஜய்யின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாக முன்கூட்டியே தகவல் வெளியானது.
பின்னர், இதை உறுதிப்படுத்தும் விதமாக செங்கோட்டையன் தலைமை செயலகம் சென்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து, அன்றே விஜயை சந்தித்தார். இதன்மூலம் 70 சதவிகிதம் முடிவான நிலையில், தற்போது அதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தும் நிலையில், நவம்பர் 27 ஆம் தேதி காலை தவெகவில் இணைந்தார். அவருக்கு விஜய் பூங்கொத்து கொடுத்து, சால்வை அணிவித்து வரவேற்றார். இவரைத்தொடர்ந்து அவரது ஆதரவாளர்களுக்கும் வரவேற்பு அளிக்கப்பட்டு, உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டு, கட்சியில் சேர்ந்தனர்.
எடப்பாடியின் பதில்
இவரது பொறுப்பு குறித்து மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இந்த சூழலில் செங்கோட்டையன் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி-யிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், “செங்கோட்டையன் அதிமுகவில் இல்லை. அதனால் பதில் சொல்ல அவசியம் இல்லை, செங்கோட்டையன் குறித்து என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்.. அவரை கேளுங்கள் என்று கூறினார்.
விஜய் வீடியோ வெளியிட்டு புகழாரம்
இந்நிலையில், தவெக கட்சியில் செங்கோட்டையன் அவர்களுக்கு தமிழக வெற்றி கழகத்தின் மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அமைப்புச் செயலாளராகவும் கூடுதல் பொறுப்பை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நியமித்துள்ளார். 50 வருட அரசியல் அனுபவம் உள்ள செங்கோட்டையனின் தவெக வருகை கட்சியை பலப்படுத்த நல்ல உறுதுணையாக இருக்கும் என்று தவெக தலைவர் விஜய் வீடியோ வெளியிட்டு செங்கோட்டையனை புகழ்ந்துள்ளார்.