
தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் ஏன்.என்.எஸ் பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை முருக பக்தர்கள் மாநாடு அனைத்து வகைகளிலும் வரலாறு காணாத வெற்றியை பெற்றுள்ளது. ஒரு மாநாட்டின் வெற்றியை, கூட்டத்தை வைத்தே தீர்மானிப்பார்கள். அந்த வகையில் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் திரண்டதால், அந்த வகையிலும் இந்த மாநாடு பெரும் வெற்றி பெற்றுள்ளது.
முருக பக்தர்கள் மாநாடு, காவல் துறையினரின் எந்த ஒத்துழைப்பும் இல்லாமலேயே ஒரு சிறு சலசலப்பும் இன்றி மிகவும் அமைதியாக நடந்து முடிந்தது. 5 லட்சம் பேர் திரண்டும் மதுரை மண்டலத்தில் டாஸ்மாக் மது விற்பனையில் எந்த உயர்வும் இல்லை என்று டாஸ்மாக் அதிகாரிகள் ஏமாற்றம் அடையும் அளவுக்கு நிலைமை இருந்தது.
இப்படி மாநாடு வரலாறு காணாத வெற்றி பெற்றதை பொறுத்துக் கொள்ள முடியாத திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும், மாநாட்டில் ஒளிபரப்பப்பட்ட மூன்று நிமிட வீடியோ காட்சிகளை வைத்து அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையே சென்று சிண்டு முடியும் வேலையில் இறங்கி உள்ளனர்.
அதிமுக - பாஜக கூட்டணி, திமுகவுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த கூட்டணி தொடர்ந்தால் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் நாம் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்து கொண்ட திமுகவினரும் அதன் கூட்டணி கட்சிகளும், அதிமுக - பாஜக கூட்டணியை எப்படியாவது முறித்து விட வேண்டும் என்று அனைத்து வகைகளும் முயன்று வருகின்றனர். அதனால்தான் முருக பக்தர்கள் மாநாட்டில், இந்து முன்னணி கடந்து வந்த பாதையை சுட்டிக்காட்டும் மூன்று நிமிட வீடியோவை வைத்து கூட்டணியை உடைக்க முடியுமா என்று பார்க்கின்றனர்.
அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே கொள்கை வேறுபாடுகள் உள்ளன. மாற்று கொள்கை உடைய கட்சிகளுடன் கூட்டணி வைத்தாலும், எந்த கட்சியும் தங்கள் அடிப்படை கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். கொள்கை வேறு கூட்டணி வேறு என்ற புரிதல், அதிமுகவுக்கு பாஜகவுக்கும் உள்ளது. இரு கட்சிகளுக்கும் ஒரே நோக்கம், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வீழ்த்துவது மட்டுமே அந்த ஒன்றைத் தவிர வேறு எந்த நோக்கமும் இரு கட்சிகளுக்கும் இல்லை என்பதை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெளிவுபடுத்தி உள்ளார்.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா அவர்கள் வகுத்து தந்த பாதையிலே அவரது அரசியல் சென்று கொண்டிருக்கிறது. தமிழக பாஜக தலைவராக பாஜகவை மிகச் சிறப்பாக வழி நடத்தி வரும், நயினார் நாகேந்திரன், கூட்டணியை வலிமைப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டு வருகிறார். அதனால்தான் திமுக கூட்டணியில் கதறல் சத்தம் அதிகமாக கேட்கிறது.
திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் என்னதான் சிண்டு முடியும் வேலையில் ஈடுபட்டாலும், அவதூறுகளை பரப்பினாலும், முருக பக்தர்கள் மாநாட்டை போல, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெற்றே தீரும். அதை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்து முடிப்பார். அதில் எந்த சந்தேகமும் இல்லை.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.