

Ambedkar Overseas Scholarship Issue: Social Welfare Department Issues Clarification
சமூகநீதித் துறை விளக்கம்
மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு பயிலும் மாணவர் பாரதிதாசனுக்கு இரண்டாம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை என வெளியான செய்திகளுக்குத் தமிழ்நாடு அரசின் சமூகநீதித் துறை அறிக்கை மூலம் விளக்கம் அளித்துள்ளது.
முதலாமாண்டில் வழங்கப்பட்ட நிதியுதவி
அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின்கீழ், மாணவர் பாரதிதாசனுக்கு 2025-2026-ம் கல்வி ஆண்டிற்காக ரூ.36 லட்சம் நிதியுதவி முழுமையாக வழங்கப்பட்டுள்ளது.
இதில் கல்விக் கட்டணம் ரூ.5,01,638 பல்கலைக்கழகக் கணக்கிலும், எஞ்சிய ரூ.30,98,362 மாணவரின் வங்கிக் கணக்கிலும் நேரடியாகச் செலுத்தப்பட்டுள்ளது.
இரண்டாம் ஆண்டு நிதியுதவி நிலை
இரண்டாம் ஆண்டிற்காக (2026–2027) பல்கலைக்கழகக் கட்டணம் ரூ.5.57 லட்சம் மற்றும் வாழ்க்கை செலவினங்களுக்காக ரூ.6.65 லட்சம் என மொத்தம் ரூ.12.00 லட்சம் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், மாணவர் பாரதிராசன் கோரிய கூடுதல் ஆராய்ச்சி செலவினமான ரூ.19.50 லட்சத்திற்கு உரிய ஆவணங்களை முறையாகச் சமர்ப்பிக்காததாலும், பல்கலைக்கழகப் பதிவாளரின் பரிந்துரை கடிதம் இல்லாததாலும் அந்நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
பல்கலைக்கழகத்திடம் கேட்கப்பட்ட விளக்கம்
முதலாமாண்டில் ஆராய்ச்சிப் பொருட்கள் வாங்கியதற்கான சரியான கணக்குகளை மாணவர் சமர்ப்பிக்கவில்லை.
இதனால், இரண்டாம் ஆண்டுக்கான ரூ.19.50 லட்சம் ஆராய்ச்சி உதவித்தொகை அம்மாணவருக்கு உண்மையிலேயே தேவைதானா என்பது குறித்து உறுதிப்படுத்தி அனுப்புமாறு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்திலிருந்து பதில் பெறப்பட்டவுடன் உடனடியாக அந்த நிதியும் விடுவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் திட்டச் செயல்பாடுகள்
இதுவரை மாணவர் பாரதிதாசனுக்கு மொத்தம் ரூ.48 லட்சம் வரை நிதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர் அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இத்திட்டத்தின்கீழ் பயிலும் 181 மாணவர்களில் வேறு எந்த மாணவரிடமிருந்தும் புகார்கள் வரவில்லை. மேலும், நடப்பு 2026-27 ஆம் ஆண்டில் 365 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க ரூ.131 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுத் திட்டம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என சமூக நீதித்துறை விளக்கமளித்துள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
முன்னதாக நேற்றைய ( 17-09-2026) தினம் மாணவர் வீடியோ வெளியிட்டு தனது வருத்தத்தைத் தெரிவித்திருந்த நிலையில், திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின், மாணவர் பாரதிராசன் கேட்பது உதவியல்ல..அரசு சார்பில் அவருக்கு உறுதியளித்த உரிமையைத்தான் கேட்கிறார்.
மாணவருக்கான நிதியை முதல்வர் வெளியிட முடியாது என வெளிப்படையாக கூறிவிட்டால், திமுகவும் மக்களும் அந்த மாணவருக்கு கல்விக் கட்டணம் செலுத்தி படிக்க வைக்க இருக்கிறோம் என தன எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
அதேபோல் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் பெரியார் பிறந்தநாளான சமூக நீதிநாளில் சமூக அநீதியை அறங்கேற்றும் தவெக அரசை கண்டிப்பதாக தனது கண்டனங்களைப் பதிவு செய்திருந்தார்.
கல்வி உதவித்தொகை விவகாரத்தில் அரசியல் இல்லை
இதைத்தொடர்ந்து தான் சமூகநீதித்துறை விளக்கம் அளித்துள்ளது. மேலும் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, செய்தியாளர்களை சந்தித்து, கல்வி உதவித்தொகை விவகாரத்தில் அரசியல் இல்லை என்று இதுகுறித்து விளக்கம் அளித்திருக்கிறார்.
======