அண்ணாமலை அறிக்கை
Annamalai & Anbumani Ramadoss on TN Govt Job Scam : தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை “முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஒன்றன் பின் ஒன்றாக ஊழல்களுக்கு உடந்தையாக மாறி இருக்கிறது. அமலாக்கத் துறை இப்போது மற்றொரு பெரிய மெகா ஊழலை அம்பலப்படுத்தி இருக்கிறது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2538 பணியிடங்களுக்கு பணம் பெற்று கொண்டு நியமனங்கள் நடைபெற்று உள்ளன.
பணி நியமனத்தில் பெரும் ஊழல்
2024ம் ஆண்டின் தொடக்கத்தில் நடந்த 2,538 பணி நியமனத்தில் தலா ரூ.35 லட்சம் என மொத்தம் ரூ.888 கோடி லஞ்சம் பெறப்பட்டு உள்ளது. 2,538 பதவிகளுக்கு விண்ணப்பித்த 1.12 லட்சம் பேர்களில், கடினமாகப் படித்து, விடாமுயற்சியுடன் தயாராக இருந்த ஆயிரக்கணக்கான தகுதியான இளைஞர்களுக்கு, ரூ.35 லட்சம் லஞ்சம் கொடுக்க முடியாமல் மறுக்கப்பட்டன என்று தெரிவித்துள்ளார்.
அடையாளம் கண்ட அமலாக்கத்துறை
திமுக அரசின் தீராத பேராசை, இளைஞர்களின் கனவுகளையும், ஆசைகளையும் நசுக்கியது. முறைகேடாக பணி நியமனம் பெற்றவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தான் கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி பணி நியமன ஆணைகளை வழங்கி இருக்கிறார். நகராட்சி நிர்வாகத் துறைக்குள் ஆழமாக வேரூன்றிய ஊழல் மோசடியை அமலாக்கத் துறை அடையாளம் கண்டுள்ளது, இந்நிலையில், அமலாக்கத்துறை தமிழக டிஜிபிக்கு ஆதாரங்களை அனுப்பியுள்ளது. தமிழக போலீசார் ஊழல் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கமிஷன் கலாச்சாரம் கட்டவிழ்ப்பு
இதைப்போல், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதிலும் கரப்ஷன், கலெக்ஷன், கமிஷன் கலாச்சாரத்தை திமுக அரசு கட்டவிழ்த்து விட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறையில் முறைகேடு நடந்துள்ளது குறித்து பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திமுகவிற்கு மன்னிப்பு கிடையாது
மேலும், பல்வேறு விமர்சனங்களை முன்வைத்த அன்புமணி ராமதாஸ் தமிழக ஆட்சியாளர்கள் உத்தமர்களைப் போல வேடமணிந்து நாடகமாடிக் கொண்டிருக்கும் வேளையில், அவர்களின் ஒவ்வொரு அணுவிலும், அசைவிலும் ஊழல் நிறைந்திருக்கிறது. கடந்த நான்கரை ஆண்டுகளில் ஊழல்களைத் தவிர அவர்கள் வேறு எதையும் செய்யவில்லை. மணல் கொள்ளை ஊழல், மது விற்பனை ஊழல், மின்சாரக் கொள்முதல் ஊழல், கட்டுமான அனுமதி ஊழல், பேருந்து கொள்முதல் ஊழல் என எங்கும், எதிலும் ஊழல்கள் தான் நிரம்பியிருக்கின்றன. இவை அனைத்தையும் விட அரசு வேலைகளுக்கு கையூட்டு வாங்குவதன் மூலம் திறமையுள்ள ஏழை இளைஞர்களுக்கு அரசு வேலை கிடைப்பதை திமுக அரசு தடுத்திருக்கிறது. திமுக ஆட்சியாளர்களின் இந்த பாவத்திற்கு எக்காலத்திலும் மன்னிப்பு கிடையாது என்று அன்புமணி விமர்சித்துள்ளார்.