

செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை
Annamalai About TVK Alliance : டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க-வின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, “பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 23-ம் தேடி அவருடைய தேர்தல் பரப்புரை சென்னை பக்கத்தில் தொடங்க இருக்கிறது. நிச்சயமாக எங்களுக்கு பெரும் நம்பிக்கை இருக்கிறது. தி.மு.க-வுக்கு எதிரான வாக்குகள் எல்லாம் ஒன்றாக இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியின் பெரும் வெற்றிக்கு வழிவகுக்கும்.” என்று கூறினார்.
பொதுவான இலக்கு திமுகவை வீழ்த்த வேண்டும்
கூட்டணி குறித்த முடிவுகளை தேசிய தலைவர்கள் எடுத்தாலும் விஜய் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வர வேண்டும் என்று நினைக்கிறீர்களா? என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, “விஜய் கூட்டணிக்கு வரவேண்டும், வரவேண்டாம் என்று நான் நினைக்கவில்லை. தலைவர்கள் முடிவெடுப்பார்கள். என்னைப் பொறுத்தவரை ஓவ்வொரு கட்சிக்கும் இலக்கு என்ன பார்க்க வேண்டும். சீமானைப் பொறுத்தவரைக்கும் திராவிட கட்சிகளே வேண்டாம் என்று ஒரு இலக்கில் போகிறார்.
அவர் இயல்பாகவே எங்கள் கூட்டணிக்கு வரப்போவதில்லை. விஜயைப் பொறுத்தவரை தி.மு.க வேண்டாம் என்று நினைத்தால், யார் வேண்டும் என்று அவர் தெளிவுபடுத்த வேண்டும். எங்களைப் பொறுத்தவரை கொள்கை முரண்பாடுகள் இருந்தாலும்கூட என்.டி.ஏ கூட்டணியில் பா.ஜ.க, அ.தி.மு.க ஒன்றாக இணைந்திருக்கிறோம். பொதுவான இலக்கு தி.மு.க-வை வீழ்த்த வேண்டும் என்று தெரிவித்தார்.
ஒரே இடத்தில் வைத்தால் பிரச்சனை
மேலும் பல்வேறு அடிப்படையில் எங்களுக்குள் சித்தாந்த நிறைய வேறுபாடுகள் இருக்கிறது என்று தெரிவித்த அவர், மும்மொழிக் கொள்கை, இருமொழி கொள்கை என நிறைய வேறுபாடுகள் இருக்கிறது. இருந்தும், இணைந்திருக்கிறோம் என்றால் காரணம் என்ன தி.மு.க-வை வீழ்த்துவதுதான். எனவே, இது குறித்து விஜய் மற்றும் வேறுவேறு தலைவர்களிடம் கேட்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை தேசிய ஜனநாயகக் கூட்டணி, பலமாக இருக்கிறது, பலமடைந்து கொண்டிருக்கிறது.
பிரதமர் மோடி வந்த பிறகு, முழுமையாக 60 நாட்கள் இருக்கிறது.” என்று கூறினார். விஜய் வந்தால் பா.ஜ.க கூட்டணி பலம் வாய்ந்ததாக ஆகுமா, தலைமைக்கு கூறுவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, “நான் தலைமைக்கு எதுவும் சொல்வதில்லை. எனக்கு பா.ஜ.க வலிமையாக இருக்க வேண்டும், தேசிய ஜனநாயகக் கூட்டணி வலிமையாக இருக்க வேண்டும் என்பதே எனது எண்ணம். முரண்பாடுகள் இருக்கக்கூடியவர்களை கூப்பிட்டு ஒரே இடத்தில் வைத்துக்கொண்டாலும் பிரச்னைதான் என்று கூறினார்.
செங்கோட்டையன் உள்பட நிறையபேர் இணைந்திருக்கிறார்கள்
இதைத்தொடர்ந்து பேசிய அவர். எல்லோரையும் மதிக்கிறோம். சிக்கன் பிரியாணியையும் மட்டன் பிரியாணியையும் கலந்து வெஜிடபுள் பிரியாணி என்று கொடுத்தால் எப்படி இருக்கும். முரண்பாடுகள், யாரை எதிர்க்கிறார்கள், யாரை எதிர்க்காமல் இருக்கிறார்கள். எல்லாவற்றையும் போட்டு குழப்பினால் கெமிஸ்ட்ரி இருக்காது. மக்கள் தேர்தல் நேரத்தில் அதெல்லாம் பார்க்கமாட்டார்கள். ஒரு கூட்டணியில் கெமிஸ்ட்ரியும் முக்கியம். ஒரு கூட்டணி ஒரே கோணத்தில் எடுத்துக்கொண்டு போக வேண்டும். விஜயின் அரசியல் அவருக்கு, எங்களுடைய அரசியல் எங்களுக்கு.” என்று கூறினார்.
நீங்கள் சொல்வதைப் பார்த்தால் விஜய் எதிராகத்தான் இருப்பார் என்று தெளிவாகத் தெரிகிறது என்றதற்கு பதிலளித்த அண்ணாமலை, “விஜயை நீங்கள் சாதாரனமாக எடைபோடவில்லை. முதல் நாளில் இருந்து சொல்கிறேன். ஒரு சினிமா ஸ்டார், மாஸ் ஹப், பாப்புலர் ஹப்பில் இருப்பவர். தமிழக வெற்றிக் கழகத்தில் நிறைய தலைவர்கள் இணைந்திருக்கிறார்கள். செங்கோட்டையன் உள்பட நிறைய பேர் இணைந்திருக்கிறார்கள். நிறைய கூட்டங்கள் போடுகிறார்கள். நானும் களத்தில் பார்க்கிறேன். எல்லாரும் ஆக்டிவாக இருக்கிறார்கள் என்று கூறினார்.
பிரேமலதா விஜயகாந்த் விரைவில் முடிவெடுப்பார்
சீமானை ஏன் குறைத்து எடை போடுகிறீர்கள். லோக் சபா தேர்தலில் எனக்கு பிரதமரே இல்லை என்று பிரசாரம் செய்தவர் எட்டரை சதவிகிதம் ஓட்டு வாங்கியுள்ளார். சீமான் எத்தனை சதவிகிதம் வாக்கு வாங்குவார், வெற்றி பெறுவார் என்று பார்க்க வேண்டும், அது எனக்கு தெரியாது. தேர்தல் களத்தில் யாரையும் லேசாக எடைபோட வேண்டாம்.
எங்கள் கூட்டணியை வலிமையாக வைத்திருக்கிறோம். மக்களிடம் சென்று நாங்கள் செய்யக்கூடிய நல்லதை சொல்கிறோம். வாக்குகள் எங்கள் பக்கம் வரும் என்று நம்புகிறோம். என்றும் பெரியர் ஐயா (ராமதாஸ்) நல்ல முடிவெடுப்பார்கள் என நம்புகிறேன். அதே நேரத்தில், தே.மு.தி.க-வில் பிரேமலதா விஜயகாந்த் வேகமாக ஒரு நல்ல முடிவெடுப்பார்கள் என்றும் நம்புவதாக அதுவரை பொறுத்திருப்போம் என்று பதிலளித்தார்.