

Annamalai quits BJP: National leadership accepts resignation letter!
யூகங்களுக்கு முற்றுப்புள்ளி
தமிழக அரசியல் வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார்.
அவரது ராஜினாமா கடிதத்தை பாஜக தேசிய தலைமை ஏற்றுக்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
அண்ணாமலையின் அரசியல் பயணம்
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை, கடந்த 2019 ஆம் ஆண்டு தனது பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று பாஜகவில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து, ஜூலை 2021-ல் தமிழக மாநில பாஜக தலைவராக அவர் பொறுப்பேற்றார்.
மக்களிடையே பெரும் வரவேற்பு
அவரது தலைமையின் கீழ், திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை குறித்து அன்றாட செய்தியாளர்கள் சந்திப்பு மற்றும் ‘என் மண் என் மக்கள்’ நடைபயணம் போன்ற அரசியல் செயல்பாடுகள் தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.
கூட்டணியும் பதவி மாற்றமும்
இருப்பினும், கடந்த 2025-ல் அண்ணாமலை மாநிலத் தலைவர் பதவியிலிருந்து மாற்றப்பட்டு, புதிய மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார்.
தொடர்ந்து தமிழக சட்டமன்ற தேர்தலின் போது அண்ணாமலை கேட்ட தொகுதி ஒதுக்கப்படாததால் அவர் தேர்தலில் போட்டியிடவில்லை; மாறாக கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் மட்டுமே ஈடுபட்டார்.
டெல்லி பயணம் மற்றும் சமாதான முயற்சிகள் தோல்வி
இந்நிலையில் கட்சித் தலைவர்கள் மத்தியில் நிலவி வந்த கருத்து வேறுபாடுகளுக்கு இடையே, அண்ணாமலை 'மக்கள் சக்தி இயக்கம்' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கவுள்ளதாக கடந்த ஒரு வாரமாக தகவல்கள் பரவி வந்தன.
அறிக்கை சமர்ப்பிப்பு
இந்த சூழலில் டெல்லிக்கு சென்ற அண்ணாமலை, பாஜக தேசிய தலைவரை சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை வழங்கினார். அத்துடன் சட்டமன்ற தேர்தலில் பாஜக தோற்றதற்கான காரணங்கள் மற்றும் அக்கட்சியில் தான் ஒதுக்கப்பட்டது குறித்த விபரங்களை அறிக்கையாகவும் சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து, கட்சியை விட்டு விலகுவது குறித்து அவர் விளக்கமளித்ததாகக் கூறப்படுகிறது. டெல்லி பாஜக தலைமை அவரை சமாதானப்படுத்த முயன்ற போதிலும், அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு
இந்நிலையில், அண்ணாமலையின் ராஜினாமா கடிதத்தை பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் ஏற்றுக்கொண்டுள்ளதாக கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக நேற்று அண்ணாமலை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் இன்று 12 மணியளவில் அனைத்து தொண்டர்கள் ஊடகவியலாளர்களிடம் மனம் திறந்து பேசப்போவதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
=====