

தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள்
Annamalai Refused BJP Tour In-Charge in TN Election 2026 : தமிழக தேர்தல்- பாஜக போட்ட திட்டம் தமிழக தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் தேர்தல் பிரச்சாரம், கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், பாஜக தமிழகத்தை குறிவைத்து களம் இறங்கியுள்ளது. அந்த வகையில் 234 தொகுதிகளிலும் தலைவர்களின் சுற்றுப்பயணத்துக்கு பாஜக திட்டமிட்டுள்ளது.
இதற்காக 72 பொறுப்பாளர்களை நியமித்தது. இதில் தமிழக பாஜக முன்னாள் தலைவர்களான அண்ணாமலை, எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை, எச்.ராஜா, உள்ளிட்டவர்கள் இடம்பிடித்திருந்தனர்.
இந்நிலையில், இவர்களுக்கு தலா 4 தொகுதிகள் முதல் 6 தொகுதிகள் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டனர். தொகுதி பொறுப்பாளராக அண்ணாமலை இதன்படி சிங்காநல்லூர், மதுரை தெற்கு, விருகம்பாக்கம், காரைக்குடி, ஸ்ரீவைகுண்டம், பத்மநாபபுரம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு பாஜகவின் சுற்றுப்பயண பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டிருந்தார். திடீரென அண்ணாமலை இந்த பொறுப்பை வேண்டாம் என நிராகரித்துள்ளார்.
பொறுப்பை உதறியதற்கு இதுதான் காரணம்
இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, தனது தந்தைக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. டயாலிஸ் மருத்துவ சிகிச்சையில் உள்ளார். இது தான் எனது முதல் கடமை. இதன் காரணமாக அதிகளவு என்னால் வெளியூர்களுக்கு சுற்றுப்பயணம் செய்ய முடியாது. எனவே தொகுதி பொறுப்பில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளதாக கூறினார். மேலும் எனது கருத்தை தலைமையிடம் தெரிவித்துள்ளேன். எனவே எனக்கு பதிலாக புதிய பொறுப்பாளரை பாஜக தலைமை விரைவில் நியமிக்கும் என தெரிவித்தார். தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு பாஜக தலைமை தான் முடிவு செய்யும் எனவும் கூறினார்.
அண்ணாமலை விலக காரணம் என்ன
கடந்த 2021ஆம் ஆண்டு முதல் தமிழக பாஜக மாநில தலைவராக அண்ணாமலை செயல்பட்டு வந்தார். இவரின் தலைமையின் கீழ் பாஜக மீதான மக்களின் பார்வை திரும்பியது. அண்ணாமலைக்கு என்று ரசிகர்கள் கூட்டம் உருவானது. பிரதமர் மோடி கூட்டத்திலும் அண்ணாமலைக்கு தான் தொண்டர்கள் மத்தியில் உற்சாக வரவேற்பு இருந்தது. இந்த நிலையில் தான் தமிழகத்தில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்தது.
ஆனால் இந்த கூட்டணிக்கு அண்ணாமலை இடையூறாக இருக்கிறார் என்ற தகவல் வெளிவந்த நிலையில், பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை மாற்றப்பட்டு நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து கட்சி நிகழ்வுகளில் பெரிய அளவில் அண்ணாமலை கலந்து கொள்ளாமல் இருந்து வந்தார். விவசாயம், விளையாட்டு என தனியாக வேறு ஒரு ரூட்டில் பயணம் செய்து வந்தார். மேலும் சமூகவலைதளங்களில் அண்ணாமலை ஆதரவாளர்களும் நயினார் நாகேந்நிரன் ஆதரவாளர்களும் மோதிக்கொண்டு வருகிறார்கள்.
அண்ணாமலைக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குமா
இந்த நிலையில் தான் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் 6 தொகுதிகளுக்கு அண்ணாமலை பொறுப்பாளாராக நியமிக்கப்பட்டார். அதனைத்தான் தற்போது அண்ணாமலை நிராகரித்துள்ளார். தமிழக பாஜக தலைமை மீதான அதிருப்தியே இதற்கு காரணம் என கூறப்பட்டு வருகிறது. எனவே வரும் நாட்களில் பாஜக என்ன நடவடிக்கை எடுக்கும், அண்ணாமலைக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குமா.? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ள நிலையில், இவர் தேர்தல் பொறுப்பை உதறியதற்கு, மேலும் பல காரணங்கள் இருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.