

அண்ணாமலை தொடர் கேள்விகள்
Annamalai slams TN Speaker Appavu : முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து, திமுக அரசின் அவலங்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து, தமிழக மக்கள் குரலின் அங்கமாக கேள்விகளை எழுப்பி வருகிறார். சமூக வலைதளங்கள், செய்தியாளர்கள் சந்திப்பு என தொடர்ந்து தன்னை முன்னிறுத்தி வரும் அண்ணாமலை, விவசாயிகள் வேதனை, பயிர்கள் வீண், தொடர் பெண்கள் பாதுகாப்பின்மை, அரசின் கொள்ளை என்றும் விமர்சித்தும், கண்டனங்களையும் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.
அண்ணாமலை எக்ஸ் பதிவு
அதன் ஒரு பகுதியாக, அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் தமிழக சட்டமன்ற சபாநாயகர் திரு. அப்பாவு, திமுக அரசின் கீழ் பயங்கரவாதம் தொடர்பான சம்பவங்கள் அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டியதற்காக, மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு. ஆர்.என். ரவியை "பயங்கரவாதி" என்று அழைக்கும் அளவுக்குக் கீழ்த்தரமாக நடந்து கொண்டுள்ளார்.
கோவையில் நடந்த குண்டுவெடிப்பை மறந்துவிட்டாரா
மேலும், 2022 ஆம் ஆண்டு கோவையில் நடந்த கொடூரமான தற்கொலைக் குண்டுவெடிப்பை திரு. அப்பாவு மறந்துவிட்டாரா என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், பி.எஃப்.ஐ குண்டர்களால் பாஜக அலுவலகங்கள் மற்றும் பாஜக நிர்வாகிகளின் நிறுவனங்கள் மீது வீசப்பட்ட பெட்ரோல் குண்டுகளை அவர் மறந்துவிட்டாரா என்றும் கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஆழமாக வேரூன்றிய பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்குவது குறித்து என்.ஐ.ஏவின் செய்திக்குறிப்புகளை அவர் எப்போதாவது சரிபார்த்தாரா உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி விமர்சித்துள்ளார்.
தமிழக மக்கள் துன்பப்படுகிறார்கள்
எல்லாவற்றிற்கும் மேலாக, பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய அரசாங்கம் தவறியதால் தமிழக மக்கள் தொடர்ந்து துன்பப்படும் நிலையில், 1998 ஆம் ஆண்டு கோவை குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி பாஷாவுக்கு, அவரது இறுதி ஊர்வலத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தியாகி போன்ற பிரியாவிடை அளிக்கப்பட்டது ஏன் என்று பல்வேறு சபாநயகர் குறித்து கேள்விகளை எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.