

Tamil Nadu Auto Fare Revision Meeting Transport Minister Vijay Tamilan Parthiban
தமிழகத்தில் ஆட்டோக்களுக்கான மீட்டர் கட்டணம் கடைசியாக கடந்த 2013-ஆம் ஆண்டு மாற்றி அமைக்கப்பட்டது. அதன் பிறகு கடந்த 13 ஆண்டுகளாகக் கட்டணம் ஏதும் உயர்த்தப்படாத நிலையில், தற்போதைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஆட்டோ கட்டணத்தை உயர்த்தக்கோரி பல்வேறு ஆட்டோ தொழிற்சங்கங்கள் தொடர்ந்து பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றன.
கிண்டியில் முத்தரப்பு பேச்சுவார்த்தை
இந்தச் சூழ்நிலையில், தமிழகத்தில் ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைப்பது தொடர்பான முக்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தை கூட்டம் நேற்று (09-07-2026) சென்னை கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையரக அலுவலகத்தில் நடைபெற்றது.
முன்னணி தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்பு
போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முக்கிய அதிகாரிகள் மற்றும் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதில் போக்குவரத்து ஆணையர் பாஸ்கர பாண்டியன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகலான தொமுச (LPF) தலைவர் நடராஜன், தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன செயல் தலைவர் பாலசுப்பிரமணியம், உரிமைக் குரல் ஓட்டுநர் சங்க பொதுச்செயலாளர் ஜாஹிர் ஹுசேன் உட்பட 30-க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிற்சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
தொழிற்சங்கங்கள் மற்றும் நுகர்வோர் அமைப்புகளின் கோரிக்கைகள்
இக்கூட்டத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் தரப்பிலும், பொதுமக்கள் (நுகர்வோர்) தரப்பிலும் வெவ்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
ஆட்டோ தொழிற்சங்கங்கள் கோரிக்கை
ஆட்டோக்களுக்கான குறைந்தபட்சக் கட்டணத்தை தற்போதுள்ள தொகையிலிருந்து ரூ.60 முதல் ரூ.70 ஆக உயர்த்த வேண்டும். அதற்கடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.30 வரை கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
தனியார் செயலிகளுக்கு கட்டுப்பாடு
ஓலா, உபெர், ராபிடோ போன்ற தனியார் செயலிகள் வாயிலாக இயக்கப்படும் வாடகை வாகனங்களை அரசு முறைப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
நுகர்வோர் அமைப்புகள் கோரிக்கை
நுகர்வோர் அமைப்புகளின் நிர்வாகிகள் தரப்பில், பொதுமக்கள் பாதிக்கப்படாத வண்ணம் ஆட்டோவிற்கான குறைந்தபட்சக் கட்டணத்தை ரூ.50 ஆக நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
முதல்வருடன் ஆலோசித்து விரைந்து முடிவு – அமைச்சர் பார்த்திபன்
பேச்சுவார்த்தை நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் கூறியதாவது:
"ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில், பொதுமக்களின் நலனையும் அரசு கருத்தில் கொள்ளும். ஆட்டோக்களில் மீட்டரைப் பொருத்தி, அதன் அடிப்படையில் வாகனங்களை இயக்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
புதிய ஆட்டோ கட்டண நிர்ணயம் விரைவில் அறிவிக்கப்படும்
இது பொதுமக்கள் சம்பந்தப்பட்ட முக்கியப் பிரச்சினை என்பதால், முதலமைச்சரின் கவனத்திற்கு இதனைக் கொண்டு சென்று ஆலோசித்த பிறகு, புதிய ஆட்டோ கட்டண நிர்ணயம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்" என்றார்.
13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்டோ கட்டணம் மாற்றி அமைக்கப்பட உள்ளதால், ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இந்த அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
=====