

நயினார் நாகேந்திரன் அறிக்கை
Nainar Nagendran on Jawahar Navodaya Vidyalaya School : தமிழகத்தில், ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் அமைப்பது தொடர்பான வழக்கில், 'தமிழக மாணவர்களை அழுத்தத்திற்கு ஆளாக்காதீர்கள்; உங்கள் மொழிப் பிரச்னைகளை நீதிமன்றத்திற்கு கொண்டு வராதீர்கள்' என, தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியது. இதுகுறித்து நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் சம கல்வி உரிமையைப் பறிக்கும் திமுக அரசுக்கு நீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்துள்ளது.
கல்வியில் சிறந்து விளங்கும் கிராமப்புற மாணவர்களுக்கு இலவச உண்டு உறைவிட வசதியுடன் தரமான கல்வியை நல்கும் ஜவஹர் நவோதயா பள்ளிகளைத் தனது அற்ப அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக தமிழகத்தில் வரவிடாமல் தடுக்கும் திமுக அரசைத் தனது கேள்விகளால் துளைத்தெடுத்துள்ளது உச்ச நீதிமன்றம் என்று விமர்சித்துள்ளார்.
மாணவர்களை முன்னேறவிடாமல் தடுப்பது முறையானதல்ல
நாடு முழுவதும் உள்ள 650 நவோதயா பள்ளிகள் மூலம் பல்லாயிரக்கணக்கான கிராமப்புற மாணவர்கள் பயன்பெற்று வரும் நிலையில், பெயருக்கு மொழியைக் காரணம் காட்டி மறுத்து, தமிழக கிராமப்புற மாணவர்களை முன்னேறவிடாமல் தடுப்பது முறையானதல்ல எனச் சரியாக சுட்டிக்காட்டியுள்ளது. தமிழகத்தில் பல பள்ளிகள் இருக்கிறதென்றால், கல்வியில் சிறந்து விளங்கும் கிராமப்புற மாணவர்களுக்கான பள்ளியும் இருந்தால் என்ன தவறு என்று சுருக்கென்று கேட்டதோடு, பள்ளிகள் பெருகும் போது தான் முன்னேறும் வாய்ப்புகளும் பெருகும் எனச் சுட்டிக்காட்டி திமுக அரசைத் தலையில் நறுக்கென்று குட்டு வைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்தார்.
வழக்கம்போல் திமுக அரசு நீதிமன்ற உத்தரவை புறக்கணித்தாலும் பரவாயில்லை
இத்தனை ஆண்டுகள் ஏழை எளிய கிராமப்புற மாணவர்களின் எதிர்காலத்தைச் சிதைத்த பாவத்திற்கு பிராயச்சித்தமாக உச்ச நீதிமன்றத்தின் ஆணைக்கிணங்க மாவட்டந்தோறும் நவோதயா பள்ளி அமைப்பதற்காக நிலத்தை திமுக அரசு கண்டறிய வேண்டும். திமுக அரசு ஒருவேளை இந்த நீதிமன்ற உத்தரவையும் வழக்கம்போல் அவமதித்தாலும் பிரச்னையில்லை, அடுத்து அமையவிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியால் தமிழகம் முழுவதும் நவோதயா பள்ளிகளைத் தொடங்கி, தமிழகத்தின் கல்வித் தரத்தை முன்னேற்றி, மாணவர்கள் சிறந்து விளங்கச் செய்யப்படும். இது உறுதி என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.