

நயினார் நாகேந்திரன் அறிக்கை
Nainar Nagendran Statement on DMK : இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று தமிழர்கள்-பீஹாரிகள் ஒற்றுமைக்காக காலையிலேயே கொதித்தெழுந்து பதிவிட்டுள்ள முதல்வரே! தங்களது தேர்தல் பிரச்சாரத்தின் போது, வயிற்றுப் பிழைப்புக்காக வரும் வடமாநிலத்தவர்களைத் தமிழகத்திற்குள் திமுக என்றும் அனுமதிக்காது என்று சூளுரைத்தீர்களே, அப்போதெல்லாம் தேச ஒற்றுமை மறந்துவிட்டதா என்று தெரிவித்துள்ளார்.
துரைமுருகன் பெண்களை வசைபாடினார்
பீஹாரிகள் தமிழகத்தில் கழிவறை கழுவுகின்றனர் என்று தரக்குறைவாக திமுக எம்பி ஒருவர் கூறியபோதும், பானி பூரி விற்பவர்கள் என்று முன்னாள் அமைச்சர் பொன்முடி ஏளனமாகப் பேசிய போதும், தங்களது மூத்த அமைச்சர் துரைமுருகன், வடமாநிலப் பெண்களைப் பன்றிகளுடன் ஒப்பிட்டு வசைபாடிய போதும், வேற்றுமையில் ஒற்றுமை தங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
உங்கள் அரசியல் முற்றிலும் வீண்
இப்படித் தாங்களும் தங்கள் திமுக உடன்பிறப்புகளும் அனுதினமும் பீஹார் மக்களைப் பொதுவெளியில் வசைபாடி அவமதிக்கும் உண்மையைத் தான் நமது பாரதப் பிரதமர் மோடி சுட்டிக் காட்டியுள்ளார். அதனைக் கண்டு குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுத்ததும், தேச ஒற்றுமை குறித்து பதிவிட்டு புனிதர் போல நாடகம் போட முயற்சிக்கிறீர்களா? தேச ஒற்றுமையைப் பேணிவரும் இச்சமூகத்தில் வடக்கு-தெற்கு என்ற பிரிவினையை உண்டாக்கத் துடிக்கும் உங்கள் அரசியல் முயற்சி முற்றிலும் வீண் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க : ”அற்ப அரசியலை உடனே நிறுத்துங்கள்” : முதல்வர் ஸ்டாலினுக்கு அட்வைஸ்
மக்களின் தேவைகளை கண் திறந்து பாருங்கள்
மேலும் காரணம், பொழுது போகாவிட்டால் வடமாநிலத்தவர்களை வசைபாடி வன்மத்தைக் கக்குவது, பீஹாரில் தேர்தல் காலம் வந்தால் வடமாநிலத்தவர்களைப் 'பிரதர்' எனக் கூறி இண்டி கூட்டணியினருடன் போட்டோஷூட் நடத்துவது போன்ற அறிவாலயத்தின் பம்மாத்து நாடகங்களை ஒட்டுமொத்த இந்தியர்களும் உணர்ந்துவிட்டனர் என்றும் ஆட்சி முடியும் தருவாயிலாவது தங்கள் இருமுகன் வேடத்தைக் களைந்துவிட்டு, முதலில் தமிழக மக்களின் தேவைகளைக் கண் திறந்து பாருங்கள் என்று தனது அறிக்கையின் மூலம் விமர்சித்துள்ளார்.