

மாணவி தற்கொலை
Nainar Nagendran on Coimbatore Girl Death : கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்தவர் சக்திவேல் குமரன். இவரது மூத்த மகள் முத்து சஞ்சனா ரெட்டிக்கடை பகுதியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த அக்.10 ஆம் தேதி பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த மாணவி முத்து சஞ்சனா உடலில் மண்ணென்னை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அக்கம் பக்கத்தினர் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 40 நாட்களுக்கும் மேலாக சிகிச்சையில் இருந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே மாணவி தான் தற்கொலைக்கு முயன்றது குறித்து வாக்கு மூலம் அளித்துள்ளார். அதில் தான் படிக்கும் பள்ளியில் பணியாற்றி வரும் அறிவியல் ஆசிரியர் சிந்தியா, தமிழ் ஆசிரியர் ராணிபாய், ஆங்கில ஆசிரியர் சியாமளா தேவி ஆகிரயோர் சக மாணவர்கள் முன்பு திட்டியதால் மன உளைச்சலில் இருந்ததாகவும், இதனால் தற்கொலைக்கு முயன்றாதாகவும் தெரிவித்துள்ளார்.
உடலை வாங்க மறுத்த பெற்றோர்
இந்நிலையில் தொடர் சிகிச்சையில் இருந்த மாணவி முத்து சஞ்சனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மகளை தற்கொலைக்கு தூண்டிய ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி பெற்றோர் உடலை வாங்க மறுத்துள்ளனர்.
நயினார் நாகேந்திரன் எக்ஸ் பதிவு
இந்த சம்பவம் நெஞ்சை கனக்க செய்வதாக விவேகானந்தர் பொன்மொழி புகைப்படத்துடன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள நயினார் நாகேந்திரன், உயிரிழந்த மாணவியின் குடும்பத்தாருக்கு என்ன ஆறுதல் சொல்லி தேற்றுவதென்றே தெரியவில்லை. படிக்கின்ற வயதில் தற்கொலை எண்ணம் வருமளவிற்கு நமது பிள்ளைகள் பலவீனம் அடைந்துவிட்டார்களா என்று நினைக்கையில் உள்ளம் வெம்பிப் போவதாக கூறியுள்ளார்.
எத்தனை துயரங்கள் மலைபோல நம் கண்முன்னே எழுந்தாலும், தற்கொலை என்பது எதற்கும் முடிவானது இல்லை என்பதை இளம் தலைமுறையினரின் மனதில் அழுந்தப்பதிக்க நாம் தவறிவிட்டோமோ என்ற குற்றவுணர்வு எழுகிறது என்று வேதனை தெரிவித்துள்ளார்.
தகப்பனாக வேண்டுகோள் விடுக்கிறார்
மேலும், சமூகத்தின் எதிர்காலத் தூண்கள் நமது கண்முன்னே இப்படி சரிந்து போவது பெரும் ஆபத்தானது. எனவே, குழந்தைகள் மீது ஆளும் அரசும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் பொதுமக்களும் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என ஒரு தகப்பனாக வேண்டுகோள் விடுக்கிறேன்.
பஞ்சு போன்ற குழந்தைகள் மனதை எப்படி இலகுவாகக் கையாள வேண்டும் என்பது குறித்து பள்ளி ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும் என்பதை ஒரு அரசியல் தலைவராக ஆளும் அரசிடம் கேட்டுக்கொள்கிறேன் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.