
Tamilisai Soundararajan : தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தவர் குறித்த சிசிடிவி காட்சிகள் கிடைத்து 5 நாட்கள் ஆகியும், இன்னும் பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.
தமிழகத்தில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்பதை, யோசித்தால் அனைவருக்கும் வேதனையாக இருக்கிறது. எதையும் கண்டுகொள்ளாத தமிழக முதல்வர் ஸ்டாலின், மக்களுடைய வீடுகளுக்கு செல்லுங்கள். அவர்களை கட்சி உறுப்பினர்கள் ஆக்குங்கள். பாஜக, அதிமுக பற்றி அவர்களிடம் பேசுங்கள் என்று கூறுவது வேதனை அளிப்பதாக இருக்கிறது.
முதல்வரின் ஒரே நோக்கம் வரும் தேர்தலில் 30 சதவீத வாக்குகளை பெறுவது தான். திமுகவினர் 10 நிமிடங்கள் ஒவ்வொரு வீட்டிலும் போய் பேசும்போது, மக்கள் கேள்விகள் கேட்க வேண்டும். அஜித்குமாருக்கு என்ன ஆனது ? அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ன நடந்தது. திருவள்ளூரில் குழந்தைக்கு நடந்தது என்ன ? மருத்துவமனைகளில் குழந்தைகளை தரையில் படுக்க வைத்துள்ளது ஏன் ? மருத்துவர்கள் இல்லாமல் இயங்கும் அரசு மருத்துவமனைகள் ஏன் ? ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சாலையில் இறங்கி போராடுவது ஏன் ? என்ற கேள்விகளை, திமுகவினரிடம் மக்கள் கேட்க வேண்டும்.
திருச்சி சிவா காமராஜர்(Trichy Siva About Kamarajar) பற்றி பேசியதை தவறு என்று முதல்வர் கூறவில்லை. இதை இன்றோடு விட்டு விடுங்கள் என்று கூறுகின்றார். பாஜகவைச் சேர்ந்த யாராவது இப்படிபேசி இருந்தால் நீங்கள் என்ன சொல்லி இருப்பீர்கள். எந்த அளவு குதித்து இருப்பீர்கள்.
மேலும் படிக்க : காவல்நிலைய மரணம், மவுனம் எதற்காக? : திமுக மீது தமிழிசை பாய்ச்சல்
கூட்டணி கட்சி என்பதால், செல்வப்பெருந்தகையும் மவுனம் சாதிக்கிறார். காமராஜரை நாங்கள் காங்கிரஸ்காரராக பார்க்கவில்லை. அவர் குழந்தைகளுக்கு கல்வி கண் திறந்தவர். நல்லாட்சி நடத்தியவர். பிரதமர் மோடி பேசும் போது, நல்லாட்சிக்கு காமராஜரின் ஆட்சியை உதாரணம் காட்டி பேசுகிறார். அந்த அளவு காமராஜர் மீது பாஜக மதிப்பு மரியாதை வைத்துள்ளது.
கம்யூனிஸ்டுகளுக்கு இப்போது உண்டியல்கள் தேவையில்லை. பெரிய பெட்டிகள் தான் தேவைப்படுகின்றன. ஆட்சியில் பங்கு வேண்டும் என்று திமுக கூட்டணியில் உள்ள செல்வப்பெருந்தகையும், கார்த்திக் சிதம்பரம் பேசத் தொடங்கி விட்டனர். இதனால் திமுக கூட்டணியிலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு தமிழிசை சௌந்தரராஜன்(Tamilisai Soundararajan) தெரிவித்தார்.