திமுகவின் மலிவான அரசியலுக்கு முடிவு கட்டப்படும்- வானதி சீனிவாசன்!

BJP MLA Vanathi Srinivasan About CM MK Stalin : இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு பகிரங்க மிரட்டல் விடுத்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என்று வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.
BJP MLA Vanathi Srinivasan About Thiruparankundram Deepam Issue Reveals CM MK Stalin Challenge To Indian Constitution Law
BJP MLA Vanathi Srinivasan About Thiruparankundram Deepam Issue Reveals CM MK Stalin Challenge To Indian Constitution LawGoogle
2 min read

வானதி சீனிவாசன் அறிக்கை

BJP MLA Vanathi Srinivasan About CM MK Stalin : சென்னை, பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மதுரையில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வழக்கம் போல தன் ஆழ்மனதில் இருக்கும் இந்து மத வெறுப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

மதுரை அரசு விழாவில் பேசிய அவர், "திருப்பரங்குன்றத்தில் தீபம், எங்கே ஏற்றப்பட வேண்டுமோ, எப்போது ஏற்றப்பட வேண்டுமோ, அங்கே வழக்கம்போல சரியாக, முறையாக ஏற்றப்பட்டிருக்கிறது. சில கட்சிகளுக்கு எப்போதுமே கலவர சிந்தனைதான். தேவையில்லாத பிரச்சினையை கிளப்பி, நம்முடைய வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்தலாம் என்று நினைக்கிறார்கள்" எனக் கூறியிருக்கிறார்.

தீபம் ஏற்றுவது ஆன்மீகம் அல்ல அரசியல் என முழங்கியிறுக்கிறார்

கார்த்திகை தீபத்தின் போது மலை உச்சியில் தான் தீபம் ஏற்றுவார்கள். திருவண்ணாமலையில் மலை உச்சியில் தான் தீபம் ஏற்றப்பட்டது. அப்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதுதான் முருக பக்தர்களின் கோரிக்கை. ஆனால், பாதி மலையில் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகில் அதாவது சிக்கந்தர் தர்காவுக்கு கீழே தீபம் ஏற்றப்பட்டுள்ளது. மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்றுங்கள் எனக் கேட்பது ஆன்மிகம் அல்ல அரசியல் என மு.க.ஸ்டாலின் மதுரையில் முழங்கியிருக்கிறார்.

உள்ளூர் மக்கள் தீபம் ஏற்றுவதற்காக போராடியுள்ளனர்

தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் 1920-ம் ஆண்டிலேயே நீதிமன்றத்திற்கு வந்து விட்டது. அப்போது பாஜகவும் இல்லை. ஆர்.எஸ்.எஸ்ஸும் இல்லை. உள்ளூர் மக்கள்தான் நீதிமன்றம் சென்றுள்ளனர். அதுவும் லண்டன் நீதிமன்றம் வரை சென்று தீபத் தூணில் தீபம் ஏற்றும் உரிமைக்காக போராடியுள்ளனர். அதன் தொடர்ச்சிதான் இப்போது நடக்கும் சட்டப் போராட்டங்களும், மற்ற போராட்டங்களும். 1920 நடந்ததையும் மு.க.ஸ்டாலின் அரசியல் என்கிறாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

உரிமைக்காக போராடினால் மலிவான அரசியல் என்கிறார்

எங்கும் இல்லாத வழக்கமாக திருப்பரங்குன்றத்தில் மட்டும் மலை உச்சியில் தீபம் ஏற்றாமல், பாதி மலையில் ஏற்றப்படுவது ஏன் என்பதற்கு மு.க.ஸ்டாலின் என்ன விளக்கம் சொல்லப் போகிறார்? கோவில் மரபுகளை காக்க வேண்டிய, விழாக்களை முறைப்படி நடத்த வேண்டிய திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியர் கோவில் நிர்வாகம், தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக மேல் முறையீடு செய்யும் அவலம் எங்காவது நடக்குமா? இப்படி இந்துக்களுக்கு அநீதி இழைத்து விட்டு, உரிமைக்காக போராடினால் மலிவான அரசியல் என்கிறார்.

நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த வேண்டியது அரசின் கடமை

"எத்தனை சூழ்ச்சி செய்தாலும், அத்தனையும் நாங்கள் முறியடிப்போம். அதை சிதைப்போம்! இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினிடம் அந்த "பாச்சா” எல்லாம் பலிக்காது! எதுவும் எடுபடாது" என்றும் மு.க.ஸ்டாலின் பேசியிருக்கிறார். நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த வேண்டியது அரசின் கடமை. தனக்கு பிடித்தமாறு இல்லாமல் போனால் தீர்ப்பை செயல்படுத்த மாட்டோம் என்று சொல்ல வருகிறாரா முதலமைச்சர் ஸ்டாலின்? நீதிமன்றம் என்ன உத்தரவிட்டாவலும் முறியடிப்போம், சிதைப்போம் என்கிறாரா?.

அதர்மம் அழிந்து தர்மம் வென்றே தீரும்

மதுரை அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நீதித்துறைக்கும், இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு பகிரங்க மிரட்டல் விடுத்திருக்கிறார். எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சிறுபான்மை மதத்தினரின் வாக்குகளுக்காக இந்துக்களை இழிவுபடுத்தும் அரசியலுக்கு முடிவு கட்டும் காலம் விரைவில் வரும். அதர்மம் அழிந்து தர்மம் வென்றே தீரும். திருப்பரங்குன்றம் மலை உச்சயில் உறுதியாக தீபம் ஏற்றப்படும். திமுகவின் மலிவான இந்து விரோத அரசியலுக்கு முடிவு கட்டப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in