தமிழக அரசிடம் முறையாக மெட்ரோ திட்ட அறிக்கையில்லை- வானதி சீனிவாசன்!

தமிழக அரசு சார்பில் முறையான வகையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு திட்ட அறிக்கை வழங்காததால் தான் கோவைக்கு மெட்ரோ திட்டம் கிடைக்கவில்லை என்று பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
BJP MLA Vanathi Srinivasan Slams DMK on Coimbatore Metro Rail Project Rejected Update Latest News in Tamil
BJP MLA Vanathi Srinivasan Slams DMK on Coimbatore Metro Rail Project Rejected Update Latest News in TamilGoogle
2 min read

வானதி சீனிவாசன் பேச்சு

BJP MLA Vanathi Srinivasan on Coimbatore Metro Rail Project Update : 2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சிக்கு வந்ததும் சரியான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்படும் என பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் உறுதியளித்தார்.

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் பீளமேடு பகுதியில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக அரசு சார்பில் முறையான வகையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு திட்ட அறிக்கை தயாரித்து வழங்காததால் தான் கோவைக்கு மெட்ரோ திட்டம் கிடைக்கவில்லை என்றும், 2026 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சிக்கு வந்ததும் சரியான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்படும் என உறுதியளித்தார்.

மத்திய அரசு மீது வீண்பழி சுமத்துகிறது

மேலும் பேசிய அவர், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் பிரதமர் மோடி அவர்கள் கோவையில் நடந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார். இந்த சூழலில் மத்திய அரசு மீது வீண்பழி சுமத்தும் வகையில் தி.மு.க அரசு சார்பில் மெட்ரோ திட்டம் கோவைக்கு மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்களை பரப்பி வருகின்றனர். கோவையில் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டம் அமல்படுத்த தமிழக அரசு சார்பில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது.

கடைகளை அகற்றும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது

அந்த அறிக்கையை முறையாக தயாரிக்காமல் மத்திய அரசுக்கு சமர்ப்பித்துள்ளனர். அதனால்தான் கோவைக்கு மெட்ரோ ரயில் மறுக்கப்பட்டுள்ளது. அதாவது இரண்டு வகையில் மெட்ரோ திட்டம் அமல்படுத்த பரீசிலிக்கப்படுகிறது. அவை மக்கள் தொகை மற்றும் போக்குவரத்து சதவீதம். இந்த அடிப்படையில் தான் கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் வழங்கப்படவில்லை. தமிழக அரசு திட்ட அறிக்கை தயார் செய்யும் போது மக்கள் கருத்தை பெற்று, மக்கள் பிரதிநிதிகள் கருத்தை பெற்று திட்ட அறிக்கை உருவாக்காமல், நகர பகுதியில் உள்ள முக்கிய கடைகளை அகற்றும் வகையில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

மேலும் மக்கள் தொகை குறைவாக உள்ள பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் மெட்ரோ ரயில் வழங்கப்படுவதாக விமர்சிக்கப்படுகிறது. ஆக்ரா முக்கியமான சுற்றுலா தளம் என்பதால் மக்கள் தொகை குறைவாக இருந்தாலும் அதிக சுற்றுலா பயணிகள் வந்து செல்வதால் அங்கு மெட்ரோ ரயில் திட்டம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் பாட்னாவில் மெட்ரோ ரயில் திட்டம் முனிசிபாலிட்டி பகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளதால் மெட்ரோ ரயில் திட்டம் வழங்கப்பட்டுள்ளது.

கோவைக்கு சரியான முறையில் திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்

இந்தத் தகவல்களை மறைத்து பிரதமர் மோடி மீது அவதூறு பரப்பும் வகையில் மெட்ரோ ரயில் திட்டத்தை கோவைக்கும், மதுரைக்கும் வழங்க மறுப்பதாக தி.மு.க அரசியல் செய்து வருகிறது. 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதும், கோவைக்கென சரியான முறையில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு நிச்சயம் மெட்ரோ ரயில் திட்டம் இங்கு கொண்டுவரப்படும்" என்று அவர் தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், முன்னாள் எம்.எல்.ஏ சேலஞ்சர் துரை மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in