

தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரம் வருமாறு :
கோவையில் இஸ்லாமிய மத அடிப்படைவாத பயங்கரவாத ஐ.எஸ். அமைப்புக்கு ஆள் சேர்த்த வழக்கில் ஏற்கனவே நான்கு பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அஹமத் அலி, ஜவஹர் சாதிக், ராஜா அப்துல்லா, ஷேக் தாவூத் ஆகிய மேலும் நான்கு பேரை தேசிய புலனாய்வு நிறுவனம் கைது செய்துள்ளது .
சலாஃபி ஜிஹாதிஸம் என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் ஆயுதப் போராட்டத்தின் மூலம் உலகளாவிய இஸ்லாமிய ஆட்சியை உருவாக்குவதற்காக இளைஞர்களை மூளைச் சலவை செய்து இந்தியாவுக்கு எதிராக, ஜனநாயக அரசுக்கு எதிராக செயல்பட வைக்க 'மெட்ராஸ் அரபிக் கல்லூரியின்' நிறுவனர் 'ஜமீல் பாஷா' என்ற நபர் தன் கல்லூரியை பயன்படுத்தி ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதன் அடிப்படையில் தான் அக்டோபர் 2022ல் கோவையில் ஜமீஷா முபீன் என்ற நபர் காரில் இருந்த எரிவாயு உருளையில் வெடிகுண்டை வெடிக்க செய்து பெரும் தாக்குதலை நடத்த திட்டமிட்டதும், திட்டத்திற்கு முன்னரே அந்த வெடிகுண்டு வெடித்ததில் பலியானதும் தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணையில் வெளிவந்தது.
தமிழகத்தில் இது போன்ற பயங்கரவாத இயக்கங்கள் மற்றும் பயங்கரவாதிகள் உருவாகிக் கொண்டிருப்பது தமிழகத்தின் சட்ட ஒழுங்கு சூழ்நிலையின் வெளிப்பாடே. ஆனால், தமிழகம் அமைதி பூங்கா என்றும், நடைபெற்றது வெறும் சிலிண்டர் குண்டு வெடிப்பு தான் என்றும் கதை சொல்லிக்கொண்டிருந்தவர்கள் இப்போதாவது விழித்து கொண்டு பயங்கரவாதத்தை வேரறுக்க துணைபுரிவார்களா? அல்லது ஒரு மதத்தின் ஓட்டுக்காக பயங்கரவாதத்தை கண்டிக்காமல் அமைதி காப்பார்களா?
தீவிரவாதம், பயங்கரவாதத்திற்கு மதம் இல்லை என்பது உண்மை தான். ஆனால், மதத்தின் பெயரால் தீவிரவாதத்தை, பயங்கரவாதத்தை தமிழகத்தில் விதைக்க முற்படுவோரை மதம் சார்ந்து பார்ப்பதும், அமைதி காப்பதும் மதவாதம் தானே?
இவ்வாறு நாராயணன் திருப்பதி குறிப்பிட்டுள்ளார்.