

நயினார் நாகேந்திரன் எக்ஸ் பதிவு
Nainar Nagendiran Speech at Kallakurichi : கள்ளக்குறிச்சியில் தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணத்தின் போது பேசிய நயினார் நாகேந்திரன்.பின்னர், எக்ஸ் தளபதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், காடுகள், மலைகள், குன்றுகள், ஆறுகள், விவசாய நிலங்கள் எனப் பலதரப்பட்ட புவியியல் முகங்களுடன், மணிமுக்தா, கோமுகி உள்ளிட்ட அணைகளை அரணாகக் கொண்டு, கிழக்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள எழில் கொஞ்சும் மாவட்டமான கள்ளக்குறிச்சியில் நமது இன்றைய பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது மகிழ்ச்சியளிக்கிறது.
இத்தனைப் பெருமைகளைத் தன்னுள் அடக்கியிருந்தாலும் திமுக ஆட்சியில் கள்ளக்குறிச்சி என்றவுடன் நமது நினைவிற்கு வருவது கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களின் ரணம் தான். மாதங்கள் பல கடந்தாலும் அத்துயரத்தின் வடு இன்னும் மறையவில்லை என்பதை இன்று அம்மக்களிடம் என்னால் உணர முடிந்தது. கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் காயத்திற்கான ஒரே மருந்து திமுக அரசை ஆட்சிக் கட்டிலில் இருந்து விரட்டியடிப்பது மட்டும் தான். அதுவும் கூடிய விரைவில் நடக்கும்!
கள்ளக்குறிச்சியை கள்ளச்சாராய குறிச்சியாக மாற்றியதே திமுக அரசுதான்
பசுமை நிறைந்த கள்ளக்குறிச்சியை இன்று கள்ளச்சாராயக் குறிச்சியாக மாற்றியது இந்தத் திமுக அரசு. மக்களின் மறதியில் நம்பிக்கை வைத்து, தேர்தலுக்கு முன்பு இதையெல்லாம் மக்கள் மறந்துவிடுவார்கள் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருக்கும் திமுக அரசுக்கு, இன்று நான் கலந்துகொண்ட ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயண’த்தில் குவிந்த மக்கள் வெள்ளம் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
கள்ளக்குறிச்சி மக்களும், ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களைப் போல் நம் பக்கம் என்று நிரூபிக்கிறது, ஆளும் கள்ளச்சாராய அரசுக்கு எதிராக நான் கண்ட மக்கள் எழுச்சி. இந்த எழுச்சியின் முடிவு 2026 தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும் என்றால் அதில் மிகையில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சாராய அரசு சீக்கிரம் வீட்டுக்கு அனுப்பப்படவேண்டும்
மேலும், சட்டம் ஒழுங்கையும் மக்களின் நலனையும் காக்க முடியாத இந்தச் சாராய அரசு சீக்கிரம் வீட்டுக்கு அனுப்பப்படவேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் ஏக்கம். அதை நம் கூட்டணி நிச்சயம் செய்து முடிக்கும்.
தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணத்தில் இன்றைய தினம் கள்ளக்குறிச்சியில் என்னுடன், மாநிலப் பொதுச் செயலாளர் திரு எம்.கருப்பு முருகானந்தம் அவர்கள், முன்னாள் மேயர் - மாநிலப் பொதுச் செயலாளர் திருமதி P. கார்த்தியாயினி உள்ளிட்ட பாஜக பிரமுகர்கள் மற்றும் இந்திய ஜனநாயகக் கட்சி மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகளும், மிகுந்த உற்சாகத்தோடு கலந்துகொண்டனர் என்று பதிவிட்டுள்ளார்.