
Siravai Aadheenam Case : மதுரையில் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பல்வேறு இந்து அமைப்புகள்,அரசியல் கட்சியினர், பக்தர்கள் கலந்துகொண்டனர். முருக பக்தியை வெளிப்படுத்தும் விதமான கலைநிகழ்ச்சிகள், கந்தசஷ்டி பாராயணம், திருப்புகழ் ஓதுதல் உள்ளிட்டவையும் நடத்தப்பட்டன.
இந்தநிலையில் முருக பக்தர்கள் மாநாட்டில(Muruga Pakthargal Manadu) மதநல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் அதில் பங்கேற்றவர்கள் பேசியதாக மதுரை மதநல்லிணக்க மத கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன், அண்ணாநகர் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதனையடுத்து காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த புகாரில் இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் சிரவை ஆதினம்(Siravai Aadheenam) குமரகுருபர சுவாமிகள் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதற்கு மாநில முருக பக்தர் பேரவை கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. மாநில முருக பக்தர் பேரவை சார்பாக ஏற்கனவே ஐந்து மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளதாக பேரவை தெரிவித்துள்து.
சிரவை ஆதினம் குமரகுருபரசுவாமிகள் அரசு சார்பில் பழனியில் நடத்தப்பட்ட மாநாட்டிலும் கலந்துகொண்டார். இந்த மாநாட்டிலும் அவர் கலந்துகொண்டு ஆசியுரை வழங்கினார். அவர் வழங்கியது ஆசியுரை மட்டுமே. பேசியது எல்லாம் முருகனின் பெருமைகளைப் பற்றித்தான். அரசியல் எதுவும் அவர் பேசவில்லை என்று கூறியுள்ள முருக பக்தர் பேரவை, கௌமார மடாலயம் என்பது முருகரை முழுமையாக ஏற்றுக்கொண்டு செயல்படக்கூடியவர்கள் என்றும், அவர் பெருமை பேசும் மாநாட்டில் பேசியதற்காக ஆதினம் மீது வழக்குப்பதிவு செய்திருப்பது முருகபக்தர்களை வருத்தமடையச் செய்திருப்பதாக தெரிவித்துள்ளது.
மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் சிரவை ஆதினம்(Siravai Aadheenam) எதுவும் பேசாதநிலையில் அவர் பேசியதாக வழக்குப்பதிவு செய்ததை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று முருகபக்தர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. வாபஸ் பெறாவிட்டால் மாவட்ட தலைநகரங்களில் கண்டனக் கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் பேரவை தெரிவித்துள்ளது.