

Chief Minister Vijay's full speech in Karur 2026
கரூரில் நடைபெற்ற பிரம்மாண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய தமிழக முதல்வர் விஜய், கடந்த காலப் பாதிப்புகள், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் மற்றும் தவெக அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டு திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை விமர்சித்தும் பேசியுள்ளார்.
2026-ல் கொடுத்த பதிலடி போதாது
பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய முதல்வர் விஜய், "ஒரு மனிதன் தன் வாழ்வில் எவ்வளவு உயரங்களுக்கு சென்றாலும் சில காயங்களையும், வலிகளையும் மறக்க முடியாது.
எனக்கு அனைத்தையும் விடப் பெருவலியையும் காயத்தையும் ஏற்படுத்தியது கரூர் சம்பவம்தான். அன்று பெரம்பலூர் செல்லும் முன் கூட்டம் அதிகமாக இருப்பதாகக் கூறிய காவல்துறையினர், நாமக்கல்லில் இருந்து கரூர் வந்தபோது எங்களை அலர்ட் செய்யாதது ஏன்?
அழுத்தம் கொடுத்தது யார்?
நெடுஞ்சாலையிலிருந்து எங்களை சம்பவ இடத்திற்கு அழைத்து வந்ததே காவல்துறைனர் தான். பின்னணியில் இருந்து அழுத்தம் கொடுத்தது யார்? என கேள்வியெழுப்பியுள்ளார்.
பணமா? ஜனமா? என்றால் ஜனம் தான்
அங்கு என் அக்கா, தங்கைகளை நான் இழந்திருக்கிறேன். அந்த வலியோடு இருந்த என்னை 'ஓடி ஒளிந்துவிட்டார்' என்று பேசுகிறார்கள். வாய் இருப்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா? பணமா, ஜனமா எனக் கேட்டால் எனக்கு எப்போதும் ஜனம்தான் முக்கியம்.
நிரந்தர பதிலடி கொடுக்க வேண்டும்
நமக்கு இத்தனை வலிகளைக் கொடுத்தவர்களுக்கு கடந்த 2026 தேர்தலில் பொதுமக்கள் நீங்கள் தக்க பதிலடி கொடுத்துவிட்டீர்கள். ஆனால், அது மட்டும் போதாது மக்களே, அவர்கள் இனி எழுந்திருக்கவே முடியாத அளவிற்கு நிரந்தரமான பதிலடியைத் தொடர்ந்து கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்" என்றார்.
5 நிமிடம் பேசியதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா
எதிர்க்கட்சிகளின் சட்டப்பேரவை வெளிநடப்பு மற்றும் விமர்சனங்களை எள்ளி நகையாடிய முதல்வர்.
சட்டப்பேரவையில் ஓட்டம்
"சட்டமன்றத்தில் 'பார்ட்டி ஃபண்ட்' என்று நான் சொன்னவுடனேயே, யார் எந்தக் கட்சி என்று கூட பெயர் குறிப்பிடாத நிலையிலும் அவர்கள் அவையிலிருந்து ஓடிவிட்டார்கள்.
'என் அப்பா பீரோவுக்குள் இல்லை' என்று அவர்களாகவே சொல்லுகிறார்கள். இவர்களுடன் ஒரே கூத்தாக இருக்கிறது. குற்றம் உள்ள நெஞ்சம் தான் குறுகுறுக்கும். நான் 5 நிமிடம் பேசியதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டு விட்டார்கள். இதற்கு மேல் பேசினால் மொத்தமாக முடிந்துவிடும் என்றார்.
பாட்டுக்கு பாட்டு கச்சேரி
மேலும் விஜய் ஏன் அதைப் பேசவில்லை, இதைப் பேசவில்லை என்கிறார்கள். பாட்டுக்கு பாட்டு கச்சேரி பண்ண எங்களுக்கும் தெரியும். என்னை பேச சொல்பவர்கள், நான் பேச ஆரம்பித்தால் வெளியே ஓடிவிடுகிறார்கள். 'விஜய் ஒவ்வொரு கதையாக வெளியே விடுவார் போல' என்று இப்போது கதறுகிறார்கள்." என்றார்.
"டாக் லெஸ், வொர்க் மோர்" - தவெக ஆட்சியின் சாதனைகள்
தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலளித்த முதல்வர், "பேசிப் பேசி பிரச்சினையை வளர்த்து, பிறர் மீது பழியைப் போட்டுவிட்டு, மக்களைத் தெருவில் அம்போ என விடும் அரசியல் எனக்குத் தேவையில்லை; அதை நான் செய்யப்போவதும் இல்லை. 'டாக் லெஸ், வொர்க் மோர்' என்பதுதான் நமது பாலிசி.
ஒரு பைசா கூட லஞ்சம் இல்லை
இன்று கரூர் கம்பெனி ஓனர் ஒருவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியாமல் ஓடிக்கொண்டே இருக்கிறார். இன்னொருவர் வெளிநாட்டில் செக்கப்-க்கு சென்றுள்ளார். ஆனால், தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அரசு அலுவலகங்களில் ஒரு பைசா லஞ்சமும் இல்லை, ஊழலும் இல்லை. வேலைகள் அனைத்தும் 'டக் டக்' என நடக்கின்றன.
உங்களுக்குப் பின்னால் நான் இருக்கிறேன்
அரசு அலுவலகங்களில் மக்களுக்கு முழு மரியாதை கிடைக்கிறது என மக்கள் கூறுவதைக் கேட்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. இனி உங்களிடம் யாராவது லஞ்சம் கேட்டால் தர முடியாது எனச் சொல்லுங்கள்; உங்களுக்குப் பின்னால் நான் இருக்கிறேன்" என்று உறுதியளித்தார்.
கூட்டுக் களவாணிகள், வெண்டிங் மெஷின் திமுக
திமுக அரசை சாடிய அவர், "நமது ஆட்சி அமைந்தது முதல் சோஃபா ஆட்சி, வாஷிங் மெஷின் ஆட்சி என்றெல்லாம் விமர்சிக்கிறார்கள். ஆனால், உண்மையில் அரசியல் வியாபாரம் செய்வதற்கான வெண்டிங் மெஷினே திமுகதான்.
தீயசக்தி இப்போது யார் கதவைத் தட்டிக்கொண்டு நிற்கிறது என்பது மக்களுக்கே தெரியும். தீய சக்தியும், தீர்ந்து போன சக்தியும் வேறு வேறெல்லாம் கிடையாது, அவர்கள் கூட்டுக் களவாணிகள். தங்களுக்குள் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என அவர்களால் நிரூபிக்க முடியுமா?" எனக் கேள்வி எழுப்பினார்.
கரூரில் தவெக சார்பில் நினைவுச் சின்னம், புதிய திட்டம்
"நான் கரூருக்கு வரக் கூடாது எனப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கப் பார்த்தனர். இது ஒன்றும் திமுக ஆட்சி இல்லை.
நமக்கு ஏற்பட்ட வேதனையான சம்பவத்தையும், நமக்கு எதிராக நடத்தப்பட்ட சதி மற்றும் சூழ்ச்சிகளையும் இனி வரும் தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் கரூரில் தவெக சார்பில் பிரம்மாண்ட நினைவுச் சின்னம் அமைக்கப்படும்" எனப் பிரகடனப்படுத்திய முதல்வர், வரும் அண்ணா பிறந்தநாளன்று தாய்மார்களுக்காக 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' தொடங்கப்பட உள்ளதாகவும் அறிவித்தார்.
மேலும், "வரவிருக்கும் இடைத்தேர்தலில் தீய சக்தி திமுகவை மொத்தமாக வெளுத்து விடுங்கள்" என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
=====