

அன்புமணி ராமதாஸ் அறிக்கை
Anbumani Ramadoss on Vanniyar Reservation : பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- இந்தியாவில் பட்டியலின மக்களில் சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின் தங்கிய நிலையில் உள்ள மக்கள் தொடர்ந்து அதே நிலையிலேயே இருக்கிறார்கள்.
அவர்களின் நிலையை முன்னேற்றவும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டின் பயன்களை அவர்கள் வென்றெடுக்கவும் பட்டியலின மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க மத்திய, மாநில அரசுகள் சட்டம் இயற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றுள்ள நீதியரசர் பி.ஆர்.கவாய் கூறியிருக்கிறார்.
இது தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை பெரும்பாலான மாநிலங்கள் செயல்படுத்தியுள்ள நிலையில், அத்தீர்ப்பை திமுக அரசு சற்றும் மதிக்காதது கண்டிக்கத்தக்கது.
தீர்ப்பின் நோக்கங்களை திமுக அரசு ஏற்கவில்லை
தலைமை நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றதையொட்டி ஊடகங்களுக்கு நேர்காணல் அளித்திருக்கும் நீதியரசர் கவாய், சமூக, கல்வி, பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையை அடிப்படையாகக் கொண்டு பட்டியலின மக்களுக்கு சமூகநீதி வழங்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் பட்டியலின மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்ற தீர்ப்பை தாம் இடம்பெற்றிருந்த 7 நீதிபதிகளைக் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு அமர்வு கடந்த ஆண்டு அளித்ததாகவும் தெரிவித்திருக்கிறார். ஆனால், அந்தத் தீர்ப்பின் நோக்கங்களை திமுக அரசு நிறைவேற்றவில்லை.
மாநில அரசு ஆணை
பட்டியலின மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்திருந்த நிலையில், முதல் மாநிலமாக தெலுங்கானா, கடந்த மார்ச் மாதம் பட்டியலினத்தவருக்கான 15 சதவீத இட ஒதுக்கீட்டை முறையே 1 சதவீதம், 9 சதவீதம், 5 சதவீதம் என 3 பிரிவுகளாக பிரித்து சட்டம் இயற்றியது.
அதேபோல், கர்நாடகத்தில் பட்டியலின சமூகத்தினருக்கு வழங்கப்பட்டு வரும் 17 சதவீதம் இட ஒதுக்கீட்டை பட்டியலினம் (வலது) 6 சதவீதம், பட்டியலினம் (இடது) 6 சதவீதம், பிற பட்டியலினத்தவருக்கு 5 சதவீதம் என 3 பிரிவுகளாக உள் இட ஒதுக்கீடு வழங்கி அம்மாநில அரசு ஆணையிட்டுள்ளது.
ஆந்திரா இடஒதுக்கீடு வழங்கியிருக்கிறது
ஆந்திராவும் பட்டியலின மக்களுக்கான 15 சதவீதம் இட ஒதுக்கீட்டை முறையே 6.5 சதவீதம், 7.5 சதவீதம், 1 சதவீதம் என 3 பிரிவுகளாக பிரித்து உள் இட ஒதுக்கீடு வழங்கியிருக்கிறது.
ஆனால், தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சியின் வலியுறுத்தலைத் தொடர்ந்து 2009-ம் ஆண்டில் அருந்ததியர்களுக்கு வழங்கப்பட்ட உள் இட ஒதுக்கீட்டுக்குப் பிறகு, வேறு எவருக்கும் இன்று வரை உள் இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.
16 மாதங்கள் ஆகியும் திமுக செயல்படுத்த மறுக்கிறது
தமிழ்நாட்டில் அருந்ததியர்களையும் சேர்த்து பட்டியலினத்தில் உள்ள 76 சமூகங்களுக்கு 18 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அவர்களில் பெரும்பாலான சமூகங்களுக்கு இன்னும் இட ஒதுக்கீட்டின் பயன்கள் கிடைக்கவில்லை.
அதைக் கருத்தில் கொண்டுதான் பட்டியலின மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. ஆனால், அதன்பின் 16 மாதங்களாகியும் அந்தத் தீர்ப்பை திமுக அரசு செயல்படுத்த மறுக்கிறது.
வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவில்லை
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற நீதியரசர் பி.ஆர்.கவாய் இடம் பெற்றிருந்த அமர்வு தான் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கடந்த 2022-ம் ஆண்டு ஆணையிட்டது.
அதன்பின் இன்று வரை 1,335 நாள்களாகியும் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு(Vanniyar Reservation) வழங்கப்படவில்லை.
சமூகநீதி வழங்கக்கூடாது என்பது தான் திமுகவின் கொள்கை
இதற்காக ஏராளமான நடவடிக்கைகளை எடுத்தும், போராட்டங்களை நடத்தியும் கூட எந்த பயனும் ஏற்படவில்லை. தமிழ்நாட்டைப் பொருத்தவரை வன்னியர்களாக இருந்தாலும், பட்டியலினத்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு சமூகநீதி வழங்கக்கூடாது என்பது தான் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் கொள்கையாக உள்ளது.
தமிழ்நாட்டின் இரு பெரும் சமூகங்களுக்கு அநீதி இழைக்கும் திமுக அரசுக்கு அந்த சமூகங்கள் வரும் தேர்தலில் மறக்க முடியாத பாடத்தை புகட்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.