ஸ்ரீகாந்தை தொடர்ந்து அடுத்து சிக்கப்போகும் நடிகர் யார்?

போதைப்பொருள் விவகாரத்தில், நடிகர் ஸ்ரீகாந்தை தொடர்ந்து வேறு சில நடிகர்களிடமும் விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டு உள்ளனர்.

ஸ்ரீகாந்தை தொடர்ந்து அடுத்து சிக்கப்போகும் நடிகர் யார்?
1 min read

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் நேற்று கைது செய்யப்பட்டது தமிழ்த் திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் ‘கொக்கைன்’ போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக சேலத்தைச் சேர்ந்த பிரதீப்குமார் என்பவர் ஆயிரம் விளக்கு பகுதியில் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்தபட்ட விசாரணையில் அதிமுக முன்னாள் நிர்வாகியான பிரசாத்திற்கு, பிரதீப் போதைப் பொருளை விற்றது தெரியவந்தது.

மேலும்,ஆப்பிரிக்க நாடான கானாவைச் சேர்ந்த ஜான் ’கொக்கைன்’ சப்ளை செய்தது தெரியவந்தது.

தொடர்ந்து காவல்துறையினர் ஜானை கைது செய்து விசாரணையில் ஈடுபட்டனர்.

விசாரணையில், ஜான், பிரசாத், பிரதீப் ஆகியோர் யார் யாருக்கெல்லாம் போதைப்பொருளை விற்பனை செய்தார்கள்? என்ற பட்டியலை காவல் துறையினரிடம் கொடுத்துள்ளனர்.

அந்த பட்டியலில் நடிகர் ஸ்ரீகாந்தின் பெயர் இடம் பெற்றிருந்ததையடுத்து சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு நடிகர் ஸ்ரீகாந்த் வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார்.

விசாரணையில் போதைப்பொருளை தான் பயன்படுத்தியதே இல்லை என்று ஸ்ரீகாந்த் மீண்டும் மீண்டும் கூறியது காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து ஸ்ரீகாந்தின் இரத்த மாதிரிகள் சேகரிக்கபட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. தொடர்ந்து 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில் ஸ்ரீகாந்த் ஆன்லைன் மூலமாகவும், சில சமயங்களில் நேரடியாகவும் போதைப்பொருளை வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

கிட்டதட்ட ஸ்ரீகாந்த் 40 முறை போதைபொருள் வாங்கி இருப்பதாகவும் அதற்கான தொகையை பிரதீப்பிற்கு gpay மூலம் 4 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் பணப் பரிவர்த்தனை செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் பயன்படுத்திய 45 நாட்கள் வரை மருத்துவ பரிசோதனையில் கண்டறிய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், மருத்துவ பரிசோதனையில் அவர் கொக்கைன் போதைப்பொருளை பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து நடிகர் ஸ்ரீகாந்த் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஸ்ரீகாந்த் தான் போதைப்பொருளை பயன்படுத்தியதாகவும், தவறு செய்து விட்டேன் என்றும் கூறியதாகவும் தகவல் வெளியானது.

மேலும் குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகமாக உள்ளது,உடல்நிலை சரியில்லாத மகனை கவனித்துக்கொள்ள வேண்டும் எனக் கூறி எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி தயாளனிடம் நடிகர் ஸ்ரீகாந்த் ஜாமீன் கோரினார்.

NDPS சிறப்பு நீதிமன்றத்தில் தான் ஜாமீன் பெற முடியும் என்றும் ஜூலை 7-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இதையடுத்து நடிகர் ஸ்ரீகாந்த் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டது தமிழ்த் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுள்ளது.

மேலும் நடிகர் ஸ்ரீகாந்தைப் போலவே வேறு நடிகர்களும் போதைப்பொருள் பயன்படுத்தினார்களா என்ற கோணத்தில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in