

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மராட்டியத்தில் நடப்பாண்டில் தொடங்கி அடுத்த 5 ஆண்டுகளில் மின்சாரக் கட்டணத்தை 26% குறைக்கப் போவதாக அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது. அதேநேரத்தில் தமிழகத்தில் ஏற்கனவே 39.81% அளவுக்கு மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியுள்ள திராவிட மாடல் அரசு, அடுத்த சில நாள்களில் மேலும் 3.16% மின்கட்டண உயர்வை நடைமுறைப்படுத்தப் போகிறது. மக்களை வாழவைக்கப் போவதாக ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக, மக்களைச் சுரண்டி ஊழல் செய்வது நாளுக்கு நாள் அம்பலமாகி வருகிறது.
தமிழ்நாட்டின் நடைமுறைகளுக்கு முற்றிலும் மாறாக, மகாராஷ்டிராவில் வீடுகள், கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து வகை இணைப்புகளுக்குமான மின்கட்டணங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் 26% குறைக்கப்படும், முதல் கட்டமாக நடப்பாண்டில் 10% கட்டணம் குறைக்கப்படும் என்று அம்மாநில முதல்வரும், மின்துறை அமைச்சருமான தேவேந்திர பட்னவிஸ் அறிவித்திருக்கிறார்.
ஆனால், தமிழ்நாட்டில், திமுக ஆட்சிக்கு வந்த ஓராண்டில், அதாவது 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அதிகபட்சமாக 52 விழுக்காடும், சராசரியாக 32 விழுக்காடும் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டது.
இவை மட்டும் போதாது என்று ஜூலை ஒன்றாம் தேதி முதல் 3.16% கட்டணத்தை உயர்த்த மின்வாரியம் முடிவு செய்திருக்கிறது. இதற்கான அறிவிப்பு எந்த நேரமும் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதையும் சேர்த்தால் கடந்த 3 ஆண்டுகளில் 42.17%, அதாவது ரூ.45,000 கோடி மின் கட்டணத்தை திமுக அரசு உயர்த்தியிருக்கிறது. இது உண்மையாகவே தமிழக மக்களுக்கு கிடைத்த பெரும் சாபமாகும்.
ஒருவேளை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தமிழ்நாட்டில் திமுக அரசு தொடர்ந்து, இதே அளவில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படுவதாகவும், மகாராஷ்டிராவில் மின்சாரக் கட்டணம் குறைக்கப்படுவதாகவும் வைத்துக் கொண்டால், அடுத்த ஐந்தாம் ஆண்டின் முடிவில் தமிழ்நாட்டுக்கும், மகாராஷ்டிராவுக்கும் இடையிலான மின் கட்டண வேறுபாடு இப்போது இருக்கும் அளவை விட 50% அதிகரித்திருக்கும். தமிழகத்தை ஆளும் திமுக அரசு தமிழ்நாட்டு மக்களை எவ்வாறு சுரண்டுகிறது என்பதற்கு இது தான் சிறந்த எடுத்துக்காட்டு.
தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக்கப் போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக, மக்களைச் சுரண்டுவதில் தான் முதலிடம் பிடித்துள்ளது. திமுகவின் கொடுங்கோல் ஆட்சியால் பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்று திரண்டு வரும் தேர்தலில் திமுகவுக்கு படுதோல்வியை பரிசாக அளிப்பார்கள்.
அடுத்து அமையவிருக்கும் பாமக அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சியில், மின்கட்டணம் குறைந்தபட்சம் 25% அளவுக்கு குறைக்கப்படும், நேர்மையான நிர்வாகத்தின் மூலம் இதை பாமக சாதிக்கும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அன்புமணி தெரிவித்துள்ளார்.