
EPS Speech About Nadanthai Vazhi Cauvery : 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பிரச்சார பயணத்தை மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திருவாரூரில் விவசாயிகளை சந்தித்துப் பேசியதாவது: கடைகோடி விவசாயிக்கும் சுத்தமான தண்ணீர் கிடைக்க வேண்டும், 20 மாவட்டங்களில் குடிநீர் ஆதாரமாக விளங்கும் காவிரி நீர் சுத்தமாக்கப்பட வேண்டும் என்பதற்காகவும், கடந்த அதிமுக ஆட்சியின் போது, ‘நடந்தாய் வாழி காவேரி’ என்கின்ற திட்டம் வகுத்து, மத்திய அரசிடம் நிதி ஒதுக்கீடு கேட்கப்பட்டது.அதனடிப்படையில், குடியரசு தலைவர் ஒப்புதலும் பெற்று ரூ.990 கோடி நிதி ஒதுக்கீடு மத்திய அரசிடமிருந்து பெறப்பட்டது. ஆனால் அந்தத் திட்டத்தை இந்த அரசு கிடப்பில் போட்டு வைத்துள்ளது.
ராசி மணலில் அணை கட்டினால் 62 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். அதனால், அந்த விவசாயிகளின் கோரிக்கையை நாம் ஆதரிக்கிறோம். இந்தியா கூட்டணியில் உள்ள இன்றைய ஆட்சியாளர்கள், காவிரி பிரச்சினையை கண்டுகொள்ளாமல் உள்ளனர். காங்கிரஸ் கட்சியும் அவர்களது கூட்டணியில்தான் உள்ளது. 39 எம்.பிக்களை வைத்துள்ள ஆளும் திமுக அரசு, இதில் கவனம் செலுத்துவதில்லை. திமுகவினர் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது, தமிழ்நாட்டை பற்றியும், மக்களை பற்றியும் பேச மாட்டார்கள். விவசாயிகள் பிரச்சினையையும் பேச மாட்டார்கள். ஆட்சியில் இல்லாதபோது பேசுவார்கள்.
கோதாவரி - காவிரி இணைப்பு(Godavari Cauvery River Linking Project) நிறைவேற்றப்பட்டால் 125 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும். அதை நிறைவேற்ற பிரதமரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. திட்டப்பணி அறிவிப்பும் கொடுத்தனர். இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் தென் மாநிலத்தில் உள்ள நதிநீர் பிரச்சினை தீர்ந்து விடும். குடிநீருக்கு தேவை என தண்ணீரை எடுத்து வந்தால், மத்திய அரசின் அனுமதியில்லாமல் நிறைவேற்றலாம் என்றும் தெலங்கானா, ஆந்திர முதலமைச்சர்களால் ஆலோசனை தரப்பட்டது. அத்தகைய திட்டத்தையும் தொடராமல் திமுக அரசு கிடப்பில் போட்டு விட்டது.
அதிமுக ஆட்சி அமையும்போது கால்நடைபூங்கா திட்டம் நிறைவேற்றப்படும். விவசாயிகளுக்கு வருவாய் தரக்கூடிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி(Edappadi Palanisamy) பேசினார்.